பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

வனதேவியின் மைந்தர்கள்


“அங்கு ஒருநாள் எல்லோருமாகப் போகலாம் ஊர்மிளாதேவி, சுதாதேவி, ராணி மாதாக்கள் எல்லோருமே போகலாம். இந்த நேரத்தில் தேவை எதுவானாலும் நிறைவேற்ற வேண்டும்...”

“அவந்திகா, என்னதான் உயர்வுகள் இங்கு இருந்தாலும், நம் வேதபுரி மாளிகையின் தாமரைக்குளம் போல் இங்கு இல்லை...”

“அது எனக்குத் தெரிந்து, மன்னர் வெட்டி நேர்த்தியாகக் கட்டிய குளம். பளிங்கு போல் தரையும் கொத்துக் கொத்தாக வண்ண வண்ணங்களாக மீன்களும் தெரியும் இக்குளத்தின் ஒரங்களில் தாமரை மலர்கள் நிறைந்து இருக்கும். செந்தாமரை, வெண்தாமரை, மாறி மாறி மலர்ந்திருக்கும்..... பிறகு, நீங்கள் வந்தபிறகு, குளத்தைச் சுற்றிச் செவ்வரளி கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கும். உங்களுக்கு நினைவிருக்குமே?”

“நினைவா?...”

பூமகள் நினைவில் ஆழ்ந்து போகிறாள். நந்தமுனியின் விரலைப் பற்றிக் கொண்டு அவள் நடந்த காலம்... கால்களைப் பளிங்கு நீரில் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பாள். நந்தமுனி கல் படியில் உட்கார்ந்து ஒற்றை நாண் மீட்டிப்பாடுவார்.


நீரும் நிலமும்
வானும் கானும்
கிளியும் கீரியும்
குயிலும் மயிலும்
எல்லாம் எல்லாம் நான்... நான்...
எல்லாம் நானா?

ஆமாம். நினைத்துப் பார் குழந்தை? மீன் உன் காலை முத்தமிட்டுப் பார்க்கிறதே ஏன்? நீ தண்ணீரைத் தொட்டுப் பார்க்கிறாயே? ஏன்? வெயிலில் கை வைத்துப் பார்க்கிறாயே, ஏன்? எல்லாவற்றிலும் உயிர்த்துடிப்பு இருக்கிறது. “இந்தக் கல்லில்?” என்று படித்துறைக் கல்லைக் காட்டுவாள்.