பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வனதேவியின் மைந்தர்கள்

வாரி வழங்குவார்களே? கம்பளி ஆடைகள், மெல்லிய தோலாடைகள், சில பட்டாடைகள் என்று அணிந்து கொள்வாள். அருவிகளிலோ தடாகத்திலோ நீராடும்போது, நீரின் மடியே தாய் மடிபோல் தோன்றும். “தாயே? நீதான் என்னை ஈன்றாயா? உன் முகம் எப்படி இருக்கும்?” என்று நீரினுள் தன்னைப் பார்ப்பாள். இந்த நீரின் மென்மை, உன் கரங்களா? இந்தக் குளிர்மை, உன் புன்னகையா? அதிகாலையில் வந்து தொடும் போது வெதுவெதுப்பாக இருக்கிறாயே, அது உன் மேனியில் என் கை தொடும்போது எழும் வாஞ்சையா?

பூத்திருக்கும் தாமரைகள், உன் கண்களா?

தாயே? உன் உயிருடன் கலந்த என் தந்தையே உன் மணாளரா? என்னை எடுத்து வளர்த்த தந்தை உன் மணாளரா?.... ஊர்மி என்னை விடப் பெரியவள் என்று சொல்கிறார்கள். நீ ஒருகால் அரண்மனைப் பணிப்பெண்ணாக இருந்தாயோ? நானும் அடிமைப் பெண்ணாக ஊழியம் செய்யலாகாது என்று என்னை மன்னர் உழவோட்டும் மண்ணில் விடுத்தாயோ? மன்னர் அதற்குப் பிறகு மேழிபிடிக்கச் செல்லவே இல்லையாம்! அவந்திகாவும் விமலையும், வாசனைப் பொடிகளும் துடைக்கும் துண்டுகளும் கூந்தலை ஆற்றிக் கொள்ளும் துபக்கலசங்களும் கொண்டு வருகிறார்கள். இந்தச் செய்குளம் வட்ட வடிவமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கல்படித்துறையைச் சுற்றிலும் மலர்ச்செடிகள் வண்னவண்ணமாகப் பூத்திருக்கின்றன. இவற்றுக்கு வாசனை இல்லை. அருகில் உடைமாறும், கூந்தல் ஆற்றிக் கொண்டு இளைப்பாறும் மண்டபம், இந்தச் செய்குளத்தை அரண்போல் பகங்கொடிகளும் முட்புதர்களும் காக்கின்றன. மாமன்னன் தேவியர் நீராடும் இடம் அல்லவா?

குளப்படிகளில் பூமை மட்டுமே இறங்குகையில் அவந்திகாவும் விமலையும் மேலே நிற்கிறார்கள்.

நீர் மித வெப்பமாக இந்தப் பின்பனிக் காலத்துக்கு இதமாக இருக்கிறது. பூமியில் இருந்து வரும் மித வெப்ப ஊற்றில் நிரம்பும் குளம். இந்த நீரையே மடைவெட்டி இன்னொரு குளத்துக்குக்-