பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

இதற்கு முன் சத்திய வேள்வி என்ற புதினத்தை எழுதினேன். அது வாசகர், திறனாய்வாளரால் பெரிதும் வரவேற்கப்பட்டிருக்கிறது. வேதப் பாடல்கள், உபநிடத கதைகள், இராமாயண இதிகாசம் ஆகியவற்றில் காணப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு புனையைப் பெற்ற நவீனம் அது. சில வரலாறுகளின் ஆதாரங்களில் நெருப்புத்துண்டு போன்று உண்மை சுடும். வயிரம் பாய்ந்த மரம் இறுகிக் கரியாகி, ஒளியை வாரி வீசும் மணியை உள்ளடக்குவது போன்று, உண்மையும் மறுக்கமுடியாததாக ஒளிரும் மாமன்னர் சனகர், ஏரோட்டியபோது, உழுமுனையில் கண்டெடுத்த பெண் குழந்தை இராமாயண மகா காவியத்தின் நாயகியாகிறாள். இராமாயண காவியம், சக்கரவர்த்தித் திருமகன் இராமசந்திரனின் பெருமை மிகு வரலாற்றைச் சொல்வதாக ஏற்றி வைக்கப்பட்டாலும், காவியத்தின் ஆதார சுருதியாகத் திகழ்பவள் நாயகி சீதைதான். இவள் மண்ணிலே கிடைத்தவள். குலம் கோத்திரம் விளக்கும் பெற்றோர் அறியாதவள். பூமித்தாய், தினமும் குருதியுமாக ஒரு சிசுவைப் பிரசவிக்க முடியுமா? இது அறிவுக்குப் பொருந்தாத ஒரு கற்பனையே. அலங்காரமான இந்தக் கற்பனை, கசப்பான ஒர் உண்மையைப் பொதித்து வைக்கப் பயன்பட்டிருக்கிறது. இந்த எண்ண ஓட்டமே, பூமியில் கிடைத்த பெண் சிசுவுக்கு, பிறப்பென்ற ஒர் ஆதி கட்டம் உண்டென்று புனையத் துணிவளித்தது. அந்தக் கால சமுதாயத்தில் நால்வகை வருணம் அழுத்தமாகக் கூறு போடவில்லை என்றாலும் வருண தருமங்கள் மிக அழுத்தமாகத் தம் ஆதிக்கத்தைப் பெண் மக்களின் வாழ்க்கையிலும் உணர்வுகளிலும் பதிக்க, மன்னராதிக்கம் துணையாக இருந்தது எனலாம். நூற்றுக்கணக்கான, பணிப்பெண்டிரும், போக மகளிரான அந்தப்புர நாயகியரும், செவிலியரும் எவ்வாறு உருவாயினர்? இதே போல் ஆண் அடிமைகளும் இருந்தனர். என்றாலும், பெண் மக்கள் போல் எந்த உரிமையும் அற்ற பந்த எல்லைகளில் அவர்களின் சேவை இருந்ததில்லை. உடலால் அவர்கள் ஆணினம் முகர்ந்து பார்க்கவோ, கசக்கி எரியவோ ஆட்படும்போது, எந்த எதிரொலியும் எழுப்ப-