பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வனதேவியின் மைந்தர்கள்

பழங்களோ, வெண்ணெய் இனிப்புப் பழங்களோ, கருநாவல் கனிகளோ, இலைகளில் வைத்து எல்லோருக்கும் கொடுப்பாள்.

ஊர்மிக்கு அவளைக் கண்டால் பிடிக்காது. ஏன், அரண் மனையில் இருந்த வேறு பல செவிலியருக்கும் அவளைப் பிடிக்காது. அவள் வந்து விட்டால், அவர்கள், “வாடி நாம் போய் தனியே விளையாடலாம்!” என்று, அவளை மட்டும் விட்டுவிட்டு வேறு பக்கம் போய்விடுவார்கள். அந்த அம்மை கொடுக்கும் கனிகளையோ, தேன் சுளைகளையோ, தொடமாட்டார்கள்.

ஒரு நாள் சுரமா அதற்குரிய காரணம் ஒன்று கூறினாள்.

“அவள் வேடுவப்பெண்மட்டுமல்ல. நரமாமிசம் உண்பவள். நம்மைப் போன்ற இளம் பெண்களை இப்படி ஏதேனும் கொடுத்து மயக்கிக் கானக நடுவில் கொண்டு சென்று, கிழித்து...”

அவள் சொல்லும் போதே பூமகளுக்கு உடல் நடுங்கியது. அன்றிரவு, அவள் அவந்திகாவின் அருகில் படுத்திருக்கையில் அவள் முகம் தோன்றிற்று. உச்சியில் முடிசுற்றிக் கொண்டு... அந்தம்மை “நான் தான் உன் அம்மை. உன்னை மண்ணில் விட்டேன். இப்போது எனக்குப் பசி. நீ வேண்டும்...” என்று கோரைப் புற்கள் போன்ற நகங்களை அவள் முதுகில் பதிக்கிறாள்.

பூமை ‘அம்மா’ என்று அலறும் போது அவந்திகாதான் திடுக்கிட்டுத் தட்டுகிறாள்.

“குழந்தாய், கனவு கண்டாயா? இதோ பாரு அவந்திகா, இருக்கேம்மா?”

“அம்மா.அம்மா.யாரு?”

“அம்மா தா... அம்மா இதோ இருக்காங்க கூட்டிவரேன்...”

சற்று நேரத்தில் அப்பா வந்தார். பெரிய ராணி வந்தார்.

“என்னம்மா?... இதோ... இதோ அம்மா...”

மங்கலான வெளிச்சத்தில் நரை தாடி தெரியத் தந்தை. அம்மா, ராணி... குழலவிழ, கண்கள் சுருங்க... கன்னத்தில் கறுப்புப் புள்ளியுடன்...