பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

49

“இது ஊர்மியின் அம்மா.”

“அப்பா, என் அம்மா, அரக்கியா? நரமாமிசம் சாப்பிடுவாளா?” அப்பா அவள் கூந்தலைத் தடவி மென்மையாக உச்சிமுகர்ந்தார்.அம்மா, ராணி மாதா அவளை மடியில் கிடத்திக் கொண்டாள்.

“யாரோ இல்லாத பொல்லாத கதைகளைச் சொல்லி யிருக்கிறார்கள் பயந்து போயிருக்கிறாள் குழந்தை!”

“உன் அம்மா, விண்ணில் இருந்து வந்தவள். தெய்வம். உன்னைப் பெற்று இந்த மாதா மடியில் தவழவிட்டுப் போனாள். நீ தெய்வமகள்...”

“அப்பா, அரக்கர் அம்மா எப்படி இருப்பார்கள்? சுரமை சொல்கிறாள், அவர்கள் விரும்பிய வடிவம் எடுப்பார்களாம். அழகான தாய் போல் வந்து, எங்களைப் போல் குழந்தைகளைத் துக்கிச் சென்று வள்ளிக்கிழங்கைக் கடித்துத் தின்பது போல் தின்பார்களாம்!”

“சிவ சிவ...! குழந்தாய், அதெல்லாம் பொய்! சுரமாவை நான் தண்டிக்கப்போகிறேன்! கதைகளில் தான் அப்படியெல்லாம் வரும். நீ தூங்கம்மா? அவந்திகா, குழந்தையை அருகில் அனைத்துக்கொண்டு படு” அவளை அவர் தூக்கிக் கட்டிலில் பஞ்சனையில் கிடத்தியது இப்போது நடந்தாற் போல் இருக்கிறது.

அவந்திகா தன் உருண்டையான, உறுதியான கைகளால் அனைத்துக் கொண்டதும், அந்த வெம்மையின் இதம் பரவியதும் நினைவில் உயிர்க்கிறது.

அடுத்த சில நாட்களில் அந்தப் பெரியம்மா, தனியாகவே வந்தாள். தோட்டத்தில் அவந்திகா, அவளுக்குப் பொற் கிண்ணத்தில் பாலும் சோறும் ஊட்டிக் கொண்டிருந்தாள்.

ஆடைமடிப்பில் இருந்து ஏதோ ஒர் ஒலையினால் முடைந்த சிறுபையை எடுத்தாள். அந்த ஒலைப்பை நிறைய அவளுக்கு மிகவும் பிடித்த வெண்ணெய்க்கனிகள் இருந்தன.

வ. மை. - 4