பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

வனதேவியின் மைந்தர்கள்


“இந்த ராட்சசி, இப்படிக் குழந்தைகளை வந்து வந்து கெடுக்கிறாள். இவள் கபடம் மன்னருக்கும் தெரியவில்லை; மாதாவுக்கும் தெரியவில்லை!...” என்று முணுமுணுத்து, உரத்த குரலில் ‘அடியே சுரமா? எல்லாரையும் உள்ளே கூட்டிச் செல்! பனிக்காற்று உடலுக்கு நல்லதில்லை கண்ட காட்டுப் பழங்களையும் வாங்கிக் கொள்ளாதீர்கள்!” என்று எச்சரித்தாள்.

ஆனால் பெரியம்மா தயங்கவில்லை.

‘குழந்தைகளா, அத்தையுடன் கண்ணாமூச்சி விளையாடுறீங்களா? என்னையும் சேத்துக்குங்கம்மா’ என்று அருகில் வந்து அவளைப் பற்றி குனிந்து உச்சி முகர்ந்து கண்ணேறு கழித்தாள்.

சண்டியை நேராகப் பார்த்துப் புன்னகை செய்தாள்.

“என்னைப் பார்த்தால் பயமாக இருக்கிறதா? நான் அரக்கி என்ற பயமா? அப்படி ஒரு தனிக்குலம் இல்லை தாயே! கொன்று தின்னும் புலியும் விஷம் கக்கும் பாம்பும் கூட அரக்க குலம் இல்லை; உயிர்க்குலம். நாமெல்லாரும் மனிதர்குலம். நம்மிடத்தில், ‘அரக்கர், தேவர் என்ற இரண்டு குலங்களும் ஒளிந்திருக்கின்றன. நாம் பயப்படும்போது, கோபப்படும்போது, பொறாமைப்படும் போது, பேராசை கொள்ளும்போது, அடுத்தவருக்குத் தீங்கு நினைக்கும் போது, நமக்குள் இருக்கும் அரக்கர் வெளிப்படுவார். ஆனால், இன்னொருவர், தேவர், ஒளிந்திருக்கிறாரே? அவரால் இந்த அரக்கரைத் தலையில் தட்டி அடக்கிவிட அன்பு, அதுதான் சத்தியம், அதுதான் இமிசை செய்யாமை... இந்த ஆயுதத்தை அந்த அரக்கருக்கு நினைவுறுத்தி, “சாந்தமடை அரக்கா, நீயும் தேவராகி விடுவாய்!” என்று அமுக்கி விடுவார்...” என்று கதைபோல் அந்த அம்மை சொல்லும்போது, அவை அமுதமொழிகளாகவே இருக்கும்.

“அப்படியானால், நம் உள்ளே இரண்டு பேர் எப்போதும் இருக்கிறார்களா?”