பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

61

அவற்றை வெளியில் உரைப்பது அவற்றின் தனி உரிமையில் மனிதர் தலையிடுவது போன்று குற்றமே. அதனால்தான் எல்லோரும் ஒற்றுமையாக அவரவர் தருமத்தைப் பாலித்து வாழ வேண்டும்; இல்லையேல் ஆபத்தை விளைவிக்கும் என்று ஆன்றோர் எச்சரித்திருக்கிறார்கள்.”

அவளுக்கு அவர் பேச்சில் மகிழ்ச்சி தோன்றவில்லை.

அவரவர் தருமம் என்றால் என்ன? க்ஷத்திரியனுக்குக் கொல்லும் தருமம், அதுதானே?... என் கையைப் பற்றியிருக்கும் இந்தக்கரம், எளியோரைப் பாதுகாக்கும் ஆதரவுக்கரம் என்று நம்புகிறேன். ஆனால், இது, பெண், விலங்கு மனிதர் என்று பாகுபாடில்லாமல் கொன்று குவித்திருக்கிறது. அரக்கர்களைக் கொல்லும்போது நான் க்ஷத்திரியதருமம் என்றால், அந்த வன்முறை உயிர் வாழத் தேவையா? என் குலத்துக்கு வரும் இழுக்கைப் போக்கவே அரக்கர் குலமழித்தேன்...

இந்தச் சொற்கள் மின்னலாய் தோன்ற, அவள் தன் செம்பஞ்சுக் குழம்பு ஏறிய மலர்க்கரங்களை விடுவித்துக் கொள்கிறாள்.

அவள் பேசாமல் தலை குனிந்திருக்கும் கோலம் அவருக்கு உவப்பாக இருக்காது. உறுத்தட்டும். உறுத்தட்டும் என்று செவ்விதழ்களைப் பிரிக்காமலே அமர்ந்திருக்கிறாள். தட்டில் இருக்கும் பட்டுத்துண்டை நீக்கியதும், நெய் அப்பத்தின் மணம் நாசியில் ஏறுகிறது. பாலடைக்கட்டி தானிய மாவினால் செய்த உப்புப் பண்டம்...

அப்பத்துண்டை விண்டு அவள் வாயருகில் கொண்டு வருவார் என்று எதிர்பார்த்து ஊடலுக்கு தன்னைச் சித்தமாக்கிக் கொள்கிறாள். ஆனால் நடந்தது வேறு.

ஒரு பாலடைத் துண்டை எடுத்து அவர் குளத்தில் விட்டெறிய, அதை நீர்மட்டத்துக்குமேல் ஒரு மீன் வந்து கவ்வ முயலுகையில் மேலே பறந்தாற் போல் வந்த ஒரு பறவை அதைக் கவ்வி, அதன் பெட்டைக்குக் கொண்டு செல்ல முங்கி மீனை