பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

வனதேவியின் மைந்தர்கள்

“பார்த்தேன் என்று சொல்லவில்லையே! யாரந்த முனிவர்? அந்தப் பெரியவரை நான் வந்து வணங்கி நிற்பேனே? எனக்கு ஏன் சொல்லி அனுப்பவில்லை? யார், தேவி, அவர்?”

“தாங்கள் பார்க்கவில்லை என்றால், அவர் வந்ததை யார் தங்களிடம் தெரிவித்தார்கள்?...”

“ஒரு பணிப்பெண்... மூத்த அன்னையின் மாளிகைப் பெண். இப்போது கூட இங்கே நின்றிருந்தாளே? அவள்தான் நான் வரும்போது முனிவர் ஒருவர் வந்திருந்தார் என்று தெரிவித்தாள்...”

“ஒ, பணிப்பெண்கள் இது போன்ற செய்திகளைக்கூட மன்னரிடம் தெரிவிப்பார்களா?...”

“இல்லை. அன்று நான் கேட்டேன். தேவி, நலமாக இருக்கிறாளா என்று. அதற்கு அவள், அவர் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். தோட்டத்து மாமரத்தடியில் ஒரு முனிவர் வந்திருக்கிறார், அவரை உபசரித்துக் கொண்டிருந்தார் என்றாள். எனக்கு இப்போதுதான் நினைவுக்கு வந்தது. கேட்டேன்.”

“... ஓ .... அப்படியா? அவள் பார்த்தாளோ?” என்று அவள் ஆறுதல் கொள்கிறாள்.

“முனி மக்கள் எவராக இருந்தாலும், வாயில் வழி வருவார்கள், வரவேற்று உபசரிப்பதற்காக நானே வந்து எதிர் கொள்வேன். இவர் யாரோ, எனக்குத் தெரியாமல் போயிற்றே என்று எண்ணினேன் தேவி...”

இந்தப் பேச்சில் என்ன குத்தல்...? இவள் கபடவேடம் தரித்து வந்து கவர்ந்து சென்ற இலங்கை மன்னனை உபசரித்ததைச் சொல்லிக் காட்டுகிறாரோ?...

“சுவாமி, இவர் முனியுமல்ல, தாங்கள் நினைக்கும்படியான குலத்தவருமல்ல. பெற்றவர் முகம் அறியாத என்னை என் தந்தை மேழி பிடித்த போது கண்டெடுத்த வனத்தில் சிறுவராக அந்தச் சம்பவத்தைப் பார்த்தாராம். ஒற்றை நாண் யாழ் மீட்டி அற்புதமாக பாடுவார். என்னைக் காண வேதபுரி அரண்மனைத் தோட்டத்துக்கு வருவார். பாட்டும் கதையும் சொல்லித் தருவார்.