பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

67

கையாலாகாதவன் என்று உன் தந்தை என்னை இகழ்வார், தேவி!” என்பார்.

“என் தந்தை நிச்சயமாக அப்படிச் சொல்ல மாட்டார். குலம் கோத்திரம் தெரியாத என்னை மனமுவந்து ஏற்றுக் கொண்டீர். ‘அந்த நன்றிப்பெருக்கை நீ எப்போதும் காட்டவேண்டும்’ என்று தான் எனக்கு அறிவுரை கூறினார்” என்று சொல்லும்போது நா தழு தழுக்கும். இப்போதும் அந்த அறிவுரையை எண்ணிக் கரைந்தவாறு, முற்றத்தில் வந்திருக்கும் பறவைகளுக்குத் தானிய மணிகளை இறைக்கிறாள்.

“குலகுரு. சதானந்தர் வருகிறார், தேவி!...”

விமலைதான் அறிவிக்கிறாள்.

வேதபுரித் தந்தையின் குலகுரு...

“இங்கே வருகிறாரா?”

“பெரிய ராணி மாதாவின் அரண்மனைப் பக்கம் மன்னர், இளையவர், எல்லோருடனும் வந்து கொண்டிருந்தார்...”

அவள் மனசில் மெல்லிய சலனங்கள் தோன்றுகின்றன. அவற்றைத் தவிர்ப்பவள் போல், சிறு சிறு குருவிகள் தானிய மணிகளைக் கொத்தி உண்பதும், விர்ரென்று பூம்பந்தலின் மேல் பறந்து செல்வதும், மூக்குடன் மூக்காய் உரசிச் சரசமாடுவதும் கண்டு அந்தக் காட்சிகளில் ஒன்றியிருக்கிறாள். இங்கு வரும் ஒவ்வொரு பறவை இணையும் இவளுக்குப் பரிசயமானது. கழுத்தில் கறுப்புப் புள்ளிகள், பிடரியில் சிவப்புக் கோலம், அடிவயிற்றின் பஞ்சு வெண்மை, பறக்கும்போது பூச்சக்கரம் போல் தெரியும் வண்ணக்கோலம். அனைத்திலும் மனம் பறி கொடுத்திருக்கிறாள். ஒருவகையில், இந்தக் கூட்டுச் சிறை அரண்மனைக் கிளிக்கு வெளியே சென்று வரும் இந்தப் பறவைகளின் தோழமை மிகுந்த ஆறுதல் தருகிறது. இவை எங்கெங்கே முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன என்பதை ஆவலுடன் கவனிக்கிறாள். தாயும் தந்தையுமாகச் சிட்டுக் குருவிகள் ஒடி ஒடி உணவு கொண்டு வந்து குஞ்சுகளுக்கு