பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

75

நீராடச் செய்து, எப்படி எல்லாம் அலங்கரித்தாள்? புத்தாடை கொணர்ந்து அணிவித்தாள். இளம் பச்சை நிறம். அப்போது... இப்படித்தான் இருந்தது. வலக்கண் துடித்தது. “இது ஆனந்த மில்லையடி பெண்ணே உன் முன் நெருப்புக்குண்டம் இருக்கிறது...” என்று அறிவித்த சூசகம்.கண்களில் நீர் கோக்கிறது. தத்தம்மாவை எடுத்துக் கன்னத்தோடு இழைய விட்டுக் கொள்கிறாள். கண்ணிர்த்துளி அதன் சிறகில் படுகிறது. “மகாராணி, அதெல்லாம் நடக்காது. கூட்டுக்கதவை டொக் டொக் கென்று தட்டினால் திறக்குமா? கூட்டில் இடம் கிடைக்காது. ஆனால். அது வருத்தமில்லை. அவள் அவதூறு பேசினாள். பூனை.பெற்றவரால் மறுக்கப்பட்டு, குலம்கோத்திரம் அறியாதவளுக்காக மன்னர் வருத்தப்படலாமா? அப்படி உயர்குல மங்கையாக இருந்தால் அரக்கர் வேந்தனுடன் தேரில் சென்று இறங்கும் வரை உயிர் தரித்திருப்பாளா? தாங்கள் பார்க்கும் போது அன்றலர்ந்த மலராக ஆபரணங்கள் சூடி வந்திருப்பாளா? அவள் உயர் குலமங்கையாக இருந்தால், உங்களுடன் கானகம் ஏகி, அங்கும் உங்களுக்கும் இளையவருக்கும் அவளைப் பாதுகாக்கும் பெருஞ்சுமையை வைத்திருப்பாளா? இங்கேயே தங்கி ஊனை ஒடுக்கித் தவமியற்றியிருப்பார்....”

“...சுவாமி, தங்களையே நினைந்து ஊனுறக்கம் விட்டுப் பித்தியானேன்.தாங்கள் என்னை மறுத்தால் நான் உயிர்த்தியாகம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை...” என்று அவர் கால்களில் வீழ்ந்தாள்.

பூமகள் நடுநடுங்கிப் போகிறாள்.

கானகத்தில் மூக்கறுபட்டவள் நினைவு வருகிறது. அந்நாள் இவர்கள் கையில் ஆயுதம் இருந்தது. கூரான கல், வில்... அம்பு...

மாளிகையில் ஆயுதம் தரித்த படைகள் இருக்கும். எனவே அவரே கொடுஞ் செயல்களில் ஈடுபட்டிருக்கமாட்டாராக இருக்கும்.

“தத்தம்மா? என்ன நடந்தது?...”