பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

வனதேவியின் மைந்தர்கள்

பெருமானுக்கு, இத்தகைய இறுதி நேர்ந்திருக்குமா? ஒரே மனைவியாக இருந்திருந்தால்...?”

அவந்திகா, அவள் நெஞ்சை நீவி இதம் செய்கிறாள்.

“ஆறுதல் கொள்ளுங்கள் மகாராணி, ஒரு உயிரை உங்களுள் தாங்கும் இந்த நேரத்தில் இத்தகைய வீண் கவலைகளுக்கு இடம் கொடுக்கலாகாது. கிளி சொன்ன செய்திகள் வெறும் அபத்தம். தாங்கள் அதற்குப் பாலூட்டி, மொழி சொல்லிப் பழக்கினர்கள். சென்ற பிறவியில் அது தந்திரக்கார நரியாக இருந்திருக்கும். என்ன பேச்சுத் திறமை இருந்தாலும், அதற்கு நம்மைப்போல் அறிவு ஏது? விடுங்கள்! அது உங்களைக் கிண்டி விளையாடுகிறது” என்று அவந்திகா எத்துணை ஆறுதல் மொழிந்தும் சஞ்சல மேகங்கள் அகலவில்லை.

கருவுற்ற மகளிரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் கோமுகி ஊற்றுப் பக்கம் வனவிருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பூமிஜா இதுநாள் வரையிலும் இந்த இடத்தைப் பார்த்திருக்கவில்லை. வேதபுரிப்பக்கம் உள்ள வெந்நீரூற்றுகள் அவளுக்குத் தெரியும். “கொதிக்கும் நீரே வரும். இங்கே அப்படி இருக்குமா?”

“தெரியாது மகாராணி, சொல்லிக் கேட்டதுதான்.”

“பதினான்கு ஆண்டுகள் இந்த மாளிகை அடிமையாக நீ என்ன செய்தாய்?”

“உண்ணுகிறோம்; உறங்குகிறோம்; மூச்சு விடுகிறோம். அப்படி ஒரு வாழ்வு. இளைய மாதா, கேகய ராணி, எத்தனை கலைகள் தெரிந்தவர்? நூல் நூற்பதிலிருந்து, வண்ணப் பொடிகள் தயாரிப்பது வரை அத்தனையிலும் வல்லவர். அவருக்குத் தாம் ராணிமாதா என்ற எண்ணமே கிடையாது. அவரில்லை என்றால், நானும் எங்கோ வழிதவறிய தாய்ப்பசுவாகச் சென்று மாண்டிருப்பேன்!.”

வேதபுரியைச் சார்ந்த இடங்கள், குன்றுபோலும் மேடு பள்ளங்களுமாக இருக்கும். இந்த இடங்கள் அப்படி இல்லை.