பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

81

“இன்னும் கொஞ்சம் நடந்தால், பெரிய ஏரி இருக்கிறது, தேவி! அங்கு பல்வேறு வகைப் பறவைகளைப் பார்க்கலாம்!”

“நாம் ஏரிக்கரைப் பக்கம் போகலாமா, ஊர்மி?”

“அம்மாடி! என்னால் இப்ப நடக்க முடியாது. அத்துடன் இப்போது நாம் ஊற்று நீரில் நீராடுவோம். பிறகு பசி ஆறுவோம். உண்ணுவோம். உறங்குவோம்” என்று சைகையால் அபிநயிக்கிறாள்.

“இந்த மூன்றைத் தவிர வேறு எதுவும் நம் வாழ்க்கையில் கிடையாதா?”

பூமை எதுவும் பேசவில்லை.

அவந்திகா எண்ணெய்க் கிண்ணங்களுடன் வருகிறாள்.

“அவந்திகா? இந்த ஆலமரத்துக்கு எத்தனை வயசிருக்கும்?”

“... மகாராஜா வயசிருக்கும்?”

ஊர்மிளா உதட்டைப் பிதக்கி, பூமிஜாவைப் பார்க்கிறாள். மன்னரின் வித்தியாப் பியாச காலத்தில் அவர் கையால் நட்ட மரமாக இருக்கலாம்.

பேசிக் கொண்டே பரிமளங்களை அவிழ்க்கிறார்கள். உடலெங்கும் மணக்கும் மூலிகைப் பொடிகளைப் பூசிக் கொண்டு இதமான வெந்நீர் ஊற்றில் அரச குலப் பெண்கள் நீராட பணிப் பெண்கள் கரையில்துாபகலசங்களைக் கொண்டு வந்து கூந்தலைத் துடைத்து உலர்த்திப் பிடிக்கச் செய்கின்றனர். ஊர்மிக்குச் சுருண்ட கூந்தல், அலையலையாகப் புரள்கிறது. சுதாவுக்கும் பூமிஜாவைப் போன்றே நீண்ட கூந்தல். பூமிஜாவுக்கு மிக அடர்ந்த கூந்தல். இடுப்புக் கீழ், பின்புறம் மறைய விழுகிறது.

கால்களில் செம்பஞ்சுக் குழம்பை இறகில் தேய்த்து, சாமளி கோலம் செய்கிறாள். அரும்பரும்பாகக் கோலத்தின் நடுவே ஒர் அழகிய மயிலின் ஒவியம் விரிகிறது.

மயில் கண்முன் உயிர்த்தாற் போல் இருக்கிறது. “சாமளி, இந்தக் கலையை எங்கு, யாரிடம் கற்றாய்?”

வ.மை — 6