பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

87

“பொய்! இது எவ்வளவு அழகாக முத்துக்கோபுரம் கட்டி இருக்கிறது? இது ஊன் உண்ணும் கொலைப் பறவை இல்லை...”

ஆனால் அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, அது அவள் முன் கையைக் கூரிய அலகினால் குத்திவிட்டுப் பறந்து உயர வானில் மறைகிறது. குத்தின இடத்தில் சிவப்பாய். குங்குமச் சிவப்பாய்க் குருதி...

“கொலைகாரப் பறவை; நான் சொன்னேன், கேட்டீர்களா?..”

என் முத்துக்கள்... மு... முத்துக்கள்.

அவள் பெருங்குரலெடுத்து அழுகிறாள். ஆனால் ஒசை வரவில்லை.

“மகளே... மகளே! என்னம்மா?...”

குளிர்ந்த நீரின் இதம் கண்களில் படுகிறது. அவள் மெல்லச் கண்களை விழிக்கிறாள். மார்பு விம்மித் தணிகிறது.

அருகிலே, ராணி மாதா இருவரும், அவந்திகாவுடன் குனிந்து பார்க்கின்றனர். அவளுக்கு நாணமாக இருக்கிறது.

“கனவாம்மா? உணவு கொண்டு தாம்பூலம் கூடச் சுவைக்காமல் உறங்கி விட்டாய்...”

இன்னும் அந்தப் பறவை கண்முன் நிற்கிறது.


8

தாரை தப்பட்டை ஒலி வலுக்கிறது. அவர்கள் நகரின் வாயிலுள் நுழைகிறார்கள். வேட்டைக்குச் சென்று திரும்பும் இளவரசர் வாழ்க! பட்டத்து அரசி வாழ்க! ராஜமாதாக்கள் வாழ்க! இளவரசிகள் வாழ்க!...

வேட்டை மிருகமான ஒரு வேங்கைப்புலியைச் சுமந்து முன்னே செல்லும் தட்டு வண்டிச் சக்கரங்கள் கிறீச்கிறீச் சென்று ஒலிக்கின்றன. பூமைக்கு அது, இனிய இசையின் அபகரமாகச் செவிகளில் விழுகிறது.