பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

வனதேவியின் மைந்தர்கள்

"இல்லை. அவள். பெரிய ராணி மாளிகையில் செம்பட்டை முடி...” அப்போது, “வாழ்க! வாழ்க! இளவரசர் வாழ்க! மூத்த இளவரசர் வாழ்க!” என்ற வாழ்த்தொலிகள் கேட்கின்றன.

பூமை வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் விரைந்து கீழே படியிறங்கி வருகையில் முன்முற்ற வாயிலைச் சுத்தம் செய்யும் பணியாளர் திகைத்தாற்போல் பரபரத்து ஒதுங்குகின்றனர். அவந்திகா விரைந்து வந்து அவள் தோளைத் தொடுகிறாள்.

“பதற்றம் வேண்டாம், மகாராணி மன்னர் பார்த்து வரச் சொல்லி இருப்பார். அதனால்தான் ஆரவாரமின்றி வருகிறார்...”

“இருக்கட்டும் இளையவரை நான் வரவேற்க வேண்டாமா?”

முன்முற்றத்துக்கு அவர் வந்து விடுகிறார். இவள் முகமலர அவருக்கு முகமன் கூறி வரவேற்குமுன் அவர் சிரம்குனிய அவள் பாதம் பணிகிறார்.

“அரசியாரை இளையவன் வணங்குகிறேன்!”

அவர் குரல் ஏனிப்படி நடுங்குகிறது? முகத்திலும் ஏனிப்படி வாட்டம்?

“மன்னர் நலம்தானே, தம்பி? நேற்று வந்திருந்தாராம். நான் ஆழ்ந்த நித்திரையில் இருந்ததால் எழுப்ப வேண்டாம் என்று திரும்பிவிட்டாராம்!”

“தேவி, தாங்கள் கானகத்தில் முனிவர் ஆசிரமங்களில் சென்று தங்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்களாம். அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்று மன்னர் விரும்புகிறார். என்னை இப்போதே பயணத்துக்குச் சித்தமாகத் தேரைக் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார். நான் மன்னர் பேச்சை ஆணையாக ஏற்று வந்துள்ளேன்...” எந்த நெகிழ்ச்சியுமில்லாத குரல்.

“அவந்திகா!...” மகிழ்ச்சி வெள்ளத்தில் கண்ணிர் முத்துக்களாக உதிர்கின்றன.