பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

வரலாற்றுக்கு முன்


ஆரியர் இந்திய மண்ணில் கால் வைப்பதற்கு நெடுங்காலத்துக்கு முன்னரே இங்கே வாழ்ந்த மக்கள் சிறந்த நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்றும், அவர்தம் நாகரிகமும், வாழ்க்கை முறையும், பிற இயல்புகளும் மிகு தொன்மை வாய்ந்தவை என்றும் ஆராய்ந்து அறுதியிட்டார்கள். அங்கே கண்டு எடுக்கப்பெற்ற பொருள்கள் ஐயாயிரமாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித வாழ்வின் ஏற்றத்தை விளக்குவனவாய் அமைந்துள்ளதை யாரே அறியாதார்!

இந்தியாவில் புதையுண்ட பொருள்கள் அளவற்றன. அதற்கென ஆராய்ச்சி செய்து, அகழ்ந்து உண்மை காண இந்திய அரசாங்கத்தார் அன்றே தொல்பொருள் ஆய்வுப் பகுதி ஒன்றை அமைத்தனர். அதன் வழியே பலப்பல இடங்களில் அகழ்ந்து எடுக்கப்பட்ட பொருள்கள் நாட்டின் பழமையொடு கலந்த பண்பாடு, வாழ்க்கைமுறை முதலிய வற்றை நன்கு எடுத்துக் காட்டுகின்றன. தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் அகழ்ந்து கண்டெடுக்கப்பட்ட பொருளால் பல உண்மைகளை உணர முடிகின்றது. சில வேளைகளில் இருவேறு தொடர்பற்ற நாடுகளில் காணும் தொல்பொருள்களால் இன்று தொடர்பற்ற அந்த இரு நாடுகளும் பண்டு தொடர்பு கொண்டு வாழ்ந்தன என்பது உணர முடிகின்றது. தமிழ் நாட்டோடு கிரேக்க உரோம நாடுகள் கொண்ட தொடர்பினைப் பழம்பொருள்கள் கொண்டு ஆராய்ந்து காட்டுவர் வரலாற்றறிஞர். அந்த நிலையிலே சிந்து வெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள் கள் அந்த நிலப் பகுதியோடு இணைந்த பிற பகுதிகளை உணர்த்துவதுடன் அவை இந்திய நாட்டுத் தொன்மை வரலாற்றைக் காட்டவும் உதவுகின்றன.

ஆரியர்கள் இந்திய மண்ணில் கிறித்து பிறக்க 1500 ஆண்டுகளுக்கு முன்—இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்—கால் வைத்தார்கள் என்பது வரலாறு காட்டும் உண்மை யாகும். ஆனால் சிந்து வெளியில் தோண்டிக் கண்டு பிடிக்கப்பட்ட நாகரிகம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.