பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திட்டம் தவறிப் போச்சு

233


தர்மமாக இருக்க வேண்டும் என்று பையனே தீர்மானித்து அப்படி ஒரு கொள்கையை கைக்கொண்டு வளர்ந்தானா? இது தீர்மானிக்க முடியாத ஒரு விஷயம்.

எப்படியோ, சின்ன வயசிலிருந்தே, ‘செய்வன திருந்தச் செய்’ என்பது மட்டுமல்ல; எதையும் முழுமையாக, ‘பெர்பெக்ட்’ ஆகச் செய்ய வேண்டும் என்பதில் கருத்தாக இருந்தான் அவன்.

பரிபூரணானந்தன் என்று இலக்கணப்படி எழுதுவது சிரமமாக இருக்கிறது என்று அவன் பரிபூரண ஆனந்தன் என்றே எழுதியும் சொல்லியும் வந்தான்.

அவரவர் பெயரை சுருக்கி வைத்துக் கொள்வது ஒரு நாகரிகமாக ஸ்டைலாக - பாஷன் ஆகக் கருதப்பட்டு வந்த காலத்திலும் சூழ்நிலையிலும் வசித்துக் கொண்டிருந்த போதிலும், அவன் பி. ஆனந்தன் என்றோ, பி.ஏ. தன் எனவோ தனது பெயரை சுருக்கிக் கொள்ள ஆசைப்பட்டானில்லை.

ஆனாலும், மற்றவர்கள் அவனை அவரவர் இஷ்டம் போலவும் சவுகரியம் போலவும் பெயர் சொல்லி கூப்பிடுவார்கள். ‘பரி’ என்று அழைத்தார்கள் பலர். ‘பூரணம்’ என்கிறார்கள் சிலர். ‘ஆனந்த்’ என்றும் ‘ஆனந்தன்’ என்றும் கூப்பிடுவார்கள் அநேகர். ஒருவன் மட்டும் ‘பரிபூரண ஆனந்தன்’ என்று வாய்நிறைய உச்சரிப்பது வழக்கம். அவனையே தன் அருமை நண்பனாக மதித்தான் ஆனந்தன். படிக்கிற காலத்திலேயே அவன் அனைத்துக் காரியங்களையும் ஒழுங்காகவும் சரியாகவும் செய்து முடிப்பதில் அதிக அக்கறை காட்டினான்.

இந்தப் பழக்கம் பிற்காலத்திலும் நிலைபெற்று வளர்ந்தது. ‘எடுத்த காரியம் எதுவானாலும் அதை பெர்பெக்ட் ஆகச் செய்து முடிக்கணும். இது என் பிரின்சிபிள்’ என்று அவன் அடிக்கடி சொல்வது வழக்கம். சொல்கிறபடி செய்வது அவனுடைய பழக்கம்.

வேலை பார்க்கிற இடத்தில், பலரும் கடியாரத்தைப் பார்த்தபடி இருப்பார்கள். ஐந்து மணி ஆகி விட்டதா என்று அடிக்கடி உற்று நோக்குவார்கள். ஐந்து ஆவதற்கு ஐந்து நிமிடங்கள் இருக்கிறபோதே, செய்த அலுவல்களை அப்படி அப்படியே போட்டு விட்டு, ‘அவசரம் ஒண்ணும் இல்லே. நாளைக்கு செய்யலாம் என்று மேசையின் இழுப்பறைக்குள் தள்ளிப் பூட்டி விட்டு, கிளம்புவதற்கு ரெடி ஆகிவிடுவார்கள். டாண் என்று ஐந்து மணிக்கெல்லாம் மிடுக்காக வெளியே நடப்பார்கள்.