28. மானமிகு வாழ்க்கை வாழ்க்கையே போராட்டமானது. பறவைகள் விலங்குகள் ஆகியவை உயிர்வாழ்வதற்கு உணவு தேடுவதில் பல்வேறு வகையாகப் போராடுகின்றன. மக்கள் வாழ்க்கையில் இத்தகைய போராட்டம் இருந்தாலும் இந்த எல்லையைக் கடந்த வாழ்க்கைப் போராட்டம் ஒன்று உண்டு. அஃது என்ன போராட்டம்? வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள்களை வைத்துக் கொண்டு அவற்றைப் போற்றி வாழப்போராடுவதே அது. இத்தகையோருக்கு உணவு முதலிய வாழ்க்கைத் தேவைகளைவிட உயர்ந்த கொள்கைகளே பெரியவையாகத் தோன்றும். இப்போராட்டம் முதிர்ந்தபோது உணவு முதலிய தேவைகளையும் பொருட்படுத்தாமல் கொள்கைகளையே போற்ற முற்படுவார்கள். அஃதாவது உயிர் வாழ்க்கையின் அடிப்படை கெடுவதாக இருந்தாலும், உயிரே நீங்குவதாக இருந்தாலும் உயர்ந்த நெறியினின்றும் பிறளமாட்டார்கள். உயர்ந்த கொள்கைகளை இழக்கும் நிலை வந்தால், அந்தக் கொள்கைகளை வாழவைத்துத் தாம் உயிர் விடுவார்கள். அவ்வாறு செய்வதால் போராட்டத்தில் வெற்றியே பெற்றுவிட்டதாக மகிழ்ச்சி அடைவார்கள். இத்தகைய உணர்ச்சியே மானம் என்பது. இத்தகைய உணர்வுடன் வாழும் வாழ்க்கையே மானம் மிகுவாழ்க்கை ஆகும். இந்த உணர்வு
பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/202
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை