பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உள்ளத்தனையது உயர்வு

தம்பீ! மக்கள் சமுதாயத்தில் நீ உயர்ந்து காணப்பட வேண்டுமானால், நீ உன் உள்ளத்தை உயர்த்திக்கொண்டாக வேண்டும்.

பறங்கிக்காயளவு, பூசனிக்காய் அளவு உயர்த்தமுடியா விட்டாலும், இளநீர் அளவிலாவது உயர்த்திக்கொள்ள வேண்டும். அதுவும் முடியாவிடில், தேங்காயளவு மாங்காயளவாகிலும் உயர்த்திக் கொள்வது நலமாகும். கடுகு உள்ளமும் துவரை உள்ளமும் கூடாது. உள்ளமே இல்லாதவர்களும் சிலர் உண்டு. அவர்களுக்கு நான் கூறும் இது வியப்பைத் தரலாம்.

உள்ளத்தை உயர்த்துவது. என்பது பெருமனம் படைப்பது என்று ஆகும். அது நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது, பிறரும் வாழ்ந்தாக வேண்டும் என்று எண்ணுவது. இந்த எண்ணம் ஒருவர் உள்ளத்தில் தோன்றுமானால் அவரது சொல்லும் உயர்ந்து, செயலும் உயர்ந்து காணப்படும். பிறகு அவர்கள் வாழ்விலும் உயர்ந்து காணப்படுவர். இதுவே வள்ளுவரது பேராசை; அல்ல மிகப் பெரிய ஆசை.

'உள்ளத்தை உயர்த்திக்கொண்டால் வாழ்வில் உயர முடியுமா' என்ற ஐயப்பாடு உடையவர்களுக்கு, ஒரு தாமரைக் குளத்தையே உவமையாகக் காட்டுகிறார் வள்ளுவர்.

குளத்தில் இரண்டடி தண்ணீர் இருந்தபோது தாமரை மலரும் இரண்டடி உயரத்தில் இருந்தது. மறுபடி மழை பெய்து தண்ணீர் நான்கடி உயரமானதும் மலர் நான்கடி உயரமானது. பிறகு வாய்க்கால் வழியே நீர்வந்து குளத்துத் தண்ணீர் ஆறடியாக உயர்ந்தது; மலரும் ஆறடியாக உயர்ந்தது. பிறகு 9, 10, 11 அடி என்று நீர் பெருகப்-