பக்கம்:வாழையடி வாழை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்றைய இலக்கியங்கள் 9


றார்கள்?" என்பதை நாம் நிச்சயம் காணத்தான் வேண்டும். கல்கி படைத்துவிட்டுச் சென்ற 'சிவகாமி' யையும், 'நந்தினி'யையும், 'சீதா'வையும், 'குந்தவை'யையும் நாம் மறக்க இயலுமா? புதுமைப்பித்தனின் கந்தசாமிப்பிள்ளை'யை நாம் மறந்துவிட இயலுமா? தம் எழுத்திலே புரட்சிசெய்து புதியதொரு சமுதாயம் கண்டவர் பலர்.

ஆக, இன்றைய இலக்கியங்களை மாணவர்கள் நன்கு படிக்கவேண்டும். வகுப்பிலே பாடப் புத்தகங்களிலே பழைய இலக்கியங்களைப் பெரிதளவில் அவர்கள் படிக்கின்றார்கள். எனவே, பீடு சான்ற அப் பழம் பெரு வாழ்வு நன்கு விளங்கித் துலங்குகின்றது. அதே நேரத்தில், இன்றைய இலக்கியங்களையும் விடாது ஆர்வத்தோடு படிப்பார்களேயானால், பழைய வாழ்விலிருந்து படிப்படியாக இன்றுவரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் வாழ்வும் நன்கு துலங்கும். பழைய இலக்கியங்களிலே அடிப்படையான உணர்ச்சியினைக் கண்டு மகிழ்ந்த மாணவர்கள், அவ்வுயரிய உணர்ச்சியுடன் வடிவத்தினையும் புதிய இலக்கியங்களிலே கண்டு மகிழ இயலும். பழைய இலக்கியம் படிக்கும்போது பெற்ற மகிழ்ச்சியோடு, இன்றைய புதிய இலக்கியங்களை படிப்பதால் பயனும் பெற இயலும். பழைய இலக்கியங்களின் கற்பனையில் ஊறித் திளைத்தும், போதை நிலையில் அறிதுயில் கொண்டதற்கும் மேலே, இன்றைய இலக்கியங்கள் வழி, இன்றைய வாழ்வின் தெளிவினைக் கண்டு உணரவியலும். எனவே, மக்கள் இன்றைய இலக்கியப் படைப்புகளை ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் படிக்க முன்வருவார்களே யானால், அது அவர்களை நல்லமுறையில் வழிநடத்திச் சென்று, சிறந்த போற்றத்தக்க முடிவுகளை அளிக்கும் என்பது திண்ணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/11&oldid=1461202" இலிருந்து மீள்விக்கப்பட்டது