பக்கம்:வாழையடி வாழை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'வாழையடி வாழை' 25

'இச்சமய வாழ்விலெனக் கென்னையினிப் பேச்சு;
என்பிறவித் துன்பமெலா மின்றாேடே போச்சு!
திருவருட்பா: நாமாவளிகள்: 42, 6-10, 43: 1

எனத் தாம் பெற்ற இன்பத்தினை விளக்கிப் பாடுகின்றார்.

இறைவனுடைய திருவடிப்பேற்றினை எவ்வாறு எய்த இயலும்? 'எளிதான செயலே’ என்கிறார் 'திருமூலர்.' எவ்வாறு?

'யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை:
யாவர்க்கு மாம்பசு விற்கொரு வாயுறை :
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி:
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே’

என்கிறார், அவர்தம் அருமந்திரமாம் திருமந்திரத்திலே (109). 'இறைவனை அடைய எளிய பச்சிலையே போதும். 'புல்லிலை எருக்கமாயினும் உடையவை கடவுள் பேணோம் என்னாது' என்கிறார் 'கபிலர்'. எனவே, இறைவன் விரும்பிச் சூடும் மலராக, மற்றவர், மங்கையர்வெறுக்கும் வெள்ளெருக்கம் பூவினைச் சொல்லினர்.'வெள்ளெருக்கஞ் சடைமுடியான்’ என்று சிவனைக் கூறினார் 'கம்பகாடர்'. ஆதலால், "மனம் நிறைந்த மல்லிகை முதலிய மலர்களே எல்லையில்லாக் கருணையுடைய ஆண்டவனை அருச்சிப்பதற்கு உகந்தவை என்று எண்ணித் தயங்கிக் காசற்ற ஏழைகள் மயங்க வேண்டா”, என்கிறார், ஈழம் தந்த தமிழ் அறிஞர்யாழ் நூல் கண்ட 'விபுலானந்த அடிகளார்':

'வெள்ளைநிற மல்லிகையோ, வேறெந்த மாமலரோ.
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ!
வெள்ளைநிறப் பூவுமல்ல, வேறெந்த மலருமல்ல,
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது’

விபுலானந்தத் தேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/27&oldid=1461216" இலிருந்து மீள்விக்கப்பட்டது