பக்கம்:வாழையடி வாழை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

‘வாழையடி வாழை’


இம்முறையில்தான் மாணிக்கவாசகரும், 'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்’ என்று இறைவனிடத்து இணையற்ற அன்பு செலுத்தியவர் காளத்திவேடராம் கண்ணப்பர் என்கிறார். 'குற்றமே குணமாகக் கொண்டு வாழும் வேட்டுவர் குடியிற் பிறந்த வராயிருப்பினும், கண்ணப்ப நாயனார், தன் அன்பு நெஞ்சின் ஆழத்திறத்தாலே திண்ணப்பராயிருந்தவர். தாயுமான தயாபரரும்,

'நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே!’

பராபரக்கண்ணி: 1 4 1


என்றார்.
இத்தகைய இறைவனை நெஞ்சில் நிலைநிறுத்தி, உண்மையோடு, உருக்கமாக, எஞ்ஞான்றும் வழிபட வேண்டும். வள்ளலாரும் வழிபடுகின்றார்; அவ்வழி பாட்டு முறையினை வகையுறக் காண்போம்:

'பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறுந் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை யுயிர்மறந்தாலும்
உயிரை மேவிய வுடல்மறந்தாலும்
கற்ற நெஞ்சகங் கலைமறந்தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந்தாலும்
நற்ற வத்தவ ருள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே!”

திருவருட்பா: திருவடித் தியானம்: 2


தாய்ப்பசுவை நினைத்து நின்றழும் கன்றேபோலத் தாய் முகம் நாடிச் சேய் கிற்கும். தாய்தனைச் சேய் மறக்கவும் ஒல்லுமோ! ஒரு வேளை மறக்கினும், தாய், சேயினை மறப்பதென்பது ஒரு போதும் இல்லை. அன்பு செலுத்துவதிலே அன்னைக்கு நிகர் அவனியில் யாரும் இல்லை. அதற்கு 'தாயே சேயை மறந்தாலும், உடலினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/28&oldid=1461217" இலிருந்து மீள்விக்கப்பட்டது