பக்கம்:வாழையடி வாழை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

‘வாழையடி வாழை’


வான் என்று தெளிவுறுத்துகின்றார். இதனையே அருட்பிரகாச வள்ளலாரும் பின் வரும் பாடலில் நய முறக் கிளர்த்துகின்றார்:

'தலங்கள்தோறும் சென்றவ்விடை அமர்ந்த
தம்பி ரான்திருத் தாளிணை வணங்கி
வலங்கொ ளும்படி என்னையுங்கூட
வாஎன் கின்றனை வாழிஎன் நெஞ்சே!
இலங்கள் தோறும்சென் றிரந்திடும் அவனே
என்னையும் உன்னையும், ஈர்க்குவன்; அதற்கு
நலங்கொ ளும்துணை யாதெனில் கேட்டி
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே’

திருவருட்பா 2-ஆம் திருமுறை: நற்றுணை விளக்கம்: 11


அடுத்து, தம்மை நாயகியாகக் கொண்டு, இறைவனை நாயகனாக எண்ணிப் பாடும் இலக்கிய மரபு தமிழ் மரபாகும். இடைக்காலச் சமய இலக்கியங்களிலே இத்தகு தூய அன்புநெறியினை நன்கு காணலாம். இம்முறையில்தான் ஞான சம்பந்தப் பெருமானின் 'சிறையாரும் மடக்கிளியே' என்ற பாடலும் நம்மாழ்வாரின் 'நீயலையே சிறு பூவாய்’ என்ற பாடலும் அமைந்துள்ளன. இம்மரபில் வள்ளலார் பாடும் பாடல்கள் நலங் கெழுமியனவாகும். 'அம்பலத்தில் ஆடு கின்றார் பாங்கிமாரே', 'தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே' 'இன்னந் தயவு வரவில்லையா!' 'தெண்டனிட்டே னென்று சொல்லடி!”, 'வருவாரழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே' என்னும் பாடல்கள், நெஞ்சில் நீங்காது நிலைத்து நிற்பனவாகும். அவர் பாடியுள்ள பாடலின்கண் அமைந்துள்ள உளவியல் நுட்பம் உணர்ந்து மகிழ்தற்குரியது:

'அருளாளர் வருகின்ற தருணமிது தோழி;
ஆயிரமா யிரங்கோடி யணிவிளக்கேற் றிடுக
தெருளாய பசுநெய்யே விடுக மற்றை நெய்யேல்
திருமேனிக் கொருமாசு செய்தாலுஞ் செய்யும்:'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/30&oldid=1461219" இலிருந்து மீள்விக்கப்பட்டது