பக்கம்:வாழையடி வாழை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 63


இறுதி இரண்டு பாடல்களில் உமார்கய்யாமின் வாழ்க்கைத் தத்துவம் உணர்த்தப்படுகிறது.

'ஆழி சூழும் உலகாளும் அரச னாக வேண்டுமெனில்,
வாழும் வாழ்வில் உன்னையும் மறந்து வாழ வேண்டுமடா!
ஏழை யாகி எளியவரின் எளிய னாக வேண்டுமடா!
தோழ னாகி யாவர்க்கும் தொண்ட னாக வேண்டுமடா!'

'இல்லாப் பொருளுக் கேங்காமல்
இருக்கும் பொருளும் எண்ணாமல்
எல்லாம் வல்ல எம்பெருமான்
இரங்கி அளிக்கும் படிவாங்கி
நல்லார் அறிஞர் நட்பையும்
நாளும் நாளும் நாடுவையேல்,
நில்லா உலகில் நிலைத்தசுகம்
நீண்டு வளரும் நிச்சயமே.'

உமார்கய்யாம் பாடல்கள் : 112113


'ரசிகமணிடி. கே சி.' அவர்கள், 'தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம்; அரிய செல்வம்; தெவிட் டாத அமிர்தம்; ஆயுள் நாள் முழுதுமே தமிழ் மகன் தன்னுடன் வைத்துக்கொண்டு அனுபவிக்க வேண்டிய வாடாத கற்பகப் பூச்செண்டு’ எனப் புகழ்ந்து, கவிமணி அவர்களைக் 'கண்ணாரக் காண ஒரு கவிஞர்’ என்றார்.

'தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை
தினமும் கேட்பதுஎன் செவிப்பெருமை!'

என்றபடி, கவிமணியின் கவிதையில் நாமும் திளைப் போமாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/65&oldid=1461242" இலிருந்து மீள்விக்கப்பட்டது