பக்கம்:வாழையடி வாழை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனார் 65


மங்கை நகைத்த ஒலியிலெலாம்அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!
காளை ஒருவன் கவிச்சுவையைக் கரை
காண நினைத்த முழுநினைப்பில் அன்னை
தோளசைத் தங்கு நடம்புரிவாள் அவன்
தொல்லறி வாளர் திறம்பெறுவான்: ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே இந்த
வைய முழுவதும் துண்டுசெய்வேன்! என
நீள இடையின்றி நீநினைத்தால் அம்மை
நேர்படு வாள் உன்றன் தோளினிலே!”

என்னும் பாடலைப் பாடினார். இந்தப் பாடலின் அழகும் பொருளும் எல்லார் மனத்தையும் கவர்ந்தன. இப்பாடல், பாரதியாராலேயே, 'ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியாரின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது’ என்னும் குறிப்புடன், சென்னை 'சுதேசமித்திரன்’ இதழுக்கு அனுப்பப்பட்டது. மேலும், இப்பாடல் பல பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இந்தப் பாடலே பாவேந்தர் பாரதி தாசனாரைத் தமிழகத்திற்குகவிதை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.

மேலைநாட்டிலே 'ஜான்சன்’ என்னும் பேரறிஞரைக் குறிப்பிட்டுக் 'கோல்டுசுமித்து’ என்னும் கவிஞர் பேசும் பொழுது, "அவர் தொடாத துறை ஒன்றுமில்லை; தொட்ட துறைகளை அழகுபடுத்தாமல் விட்டதில்லை” என்றாேர் அருமையான கருத்தினை வெளியிட்டார். இதுபோன்று பாரதிதாசனார் கவிதைக்கலை நன்கு கைவரப் பெற்றவர். கலைகளிலேயே நுண்மையானதொரு கலை கவிதைக் கலையாம். அக்கவிதைக் கலையிலே தந்நேரில்லாத் தமிழ்ப்பெருங் கவிஞராய்ப் பாரதிதாசனார் உலவினார். அவர் எழுதுகோல் கவிதையின் வண்ணத்தினை யெல்லாம் கவினுறக் காட்டியது.

வா.—5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/67&oldid=1461244" இலிருந்து மீள்விக்கப்பட்டது