பக்கம்:வாழையடி வாழை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. இன்றைய இலக்கியங்கள்


வாழும் மக்களிடையே மூவகைப் போக்கினைக் காணலாம். பழமையினைப் பலபடப் பாராட்டிப் புதுமையினைப் புறக்கணிக்கின்ற ஒருவகைப் போக்கு; புதுமையினைக் கண்மூடிப் போற்றி வரவேற்று, பழமையினைப் பத்தாம்பசலி என்று எள்ளி நகையாடும் ஒருவகைப் போக்கு; பழமையிலேயே கொள்ள வேண்டுவனவற்றைக் கொண்டு, புதுமையிலே போற்ற வேண்டுவனவற்றை மட்டுமே போற்றுகின்ற நடுநிலைப் போக்கு.

பொதுவாகப் பழமை என்றவுடனே அதனைப் பாராட்டி விடுகின்ற போக்கினை மக்களுள் ஒருசாராரிடத்தில் காண்கின்ற நாம், மற்றாெரு சாரார் பழமை என்றவுடனே மாறாத வெறுப்பு அடைவதனையும் காண்கின்றாேம். இப்படிப்பட்ட ஒரு சார்பான கொள்கையும் போக்கும், வாழ்விற்கு உயிரும் உரமும் ஊட்டு வனவெனக் கூறல் இயலாது. பழமையிலே வேர் ஊன்றி புதுமையிலே கிளைபடரும் வாழ்விலே, வாழ்க்கைத் தெளிவினையும் மலர்ச்சியினையும் காணலாம். இது குறித்தே ஒருவாத புகழுடைய திருவாசகம் தந்த மணிவாசகப் பெருமானார், இறைவனைப்பற்றிப் பாடுங்கால், 'முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்ப் பெயர்த்தும் அப்பெற்றியனாய்’ எல்லாம் கடந்த இறைவன் விளக்கமுறுகிறான் என விதந்து கூறினார்.

பரந்த பண்பட்ட நம் பழமையான இலக்கியங்கள்,நம் வாழ்விற்கு உறுதுணை செய்பவை. அந்த அளவிலே, சென்ற நூற்றாண்டுகளிலே, நம் முன்னோர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/7&oldid=1461200" இலிருந்து மீள்விக்கப்பட்டது