பக்கம்:வாழையடி வாழை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

‘வாழையடி வாழை’


மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்! ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்
தனில் அந்த அழகென்பாள் கவிதை தந்தாள்’

—அழகின் சிரிப்பு : அழகு: 1


இவ்வாறு இளம் பரிதியிலும், கடற் பரப்பிலும், ஒளிப்புனலிலும், சோலையிலும், மலர்களிலும், தளிர்களிலும், மாலை மறையும் மாணிக்கச் சுடரிலும், ஆல மரத்தின் கிளையிலும், கிளையின் கிளியிலும் பொலியும் அழகு, கவிஞர்தம் நெஞ்சில் உணர்ச்சி ஊற்றினைப் பெருக்கி உயர்கவிதைகளை உருவாக்கிற்று. 'அழகு தனைக் கண்டேன், நல்லின்பம் கண்டேன்’ என்று அழகு தரும் அமைதியான இன்பத்தினைப் பேசும் கவிஞர், தாம் பெற்ற பேற்றினை நமக்கும் நல்க நல்லுளம் கொண்டு பின்வருமாறு பாடுகின்றார்:


'பசையுள்ள பொருளிலெலாம் பசைய வள்காண்!
பழமையினாற் சாகாத, இளைய வள்காண்!
நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்!
நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை’

—அழகின் சிரிப்பு : அழகு: 3


இப்பாடலடிகளைக் 'கீட்ஸின்' கூற்றாேடு பொருத்திக் காண்க,

கடலலைகள் புரண்டு எழுந்து எழுந்து விழுந்து விழுந்து அழிவதனை,


'நேரிடும் அலையோ கல்வி நிலையத்தின் இளைஞர்போலப்
பூரிப்பால் ஏறும்; வீழும் : புரண்டிடும்; பாராய் தம்பி!

—அழகின் சிரிப்பு : கடல் : 1


என்று இளைஞர் தம் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும ஒப்பிட்டுப் பேசுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/70&oldid=1461247" இலிருந்து மீள்விக்கப்பட்டது