பக்கம்:வாழையடி வாழை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனார் 71


கிளைதொறும் குதித்துத் தாவிக்
கீழுள்ள விழுதை யெல்லாம்
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்
ஆலினைக் காற்று மோதும்;
அசைவனோ எனச்சி ரித்துக்
கோலத்துக் கிளைகு லுங்க
அடிமரக் குன்று நிற்கும்!
தாலாட்ட ஆளில் லாமல்
தவித்திட்ட கிளைப்புள் ளெல்லாம்
கால்வைத்த கிளைகள் ஆடக்
காற்றுக்கு நன்றி கூறும்!”

இவ்விரு பாடல்களும் கவிதையின் சிறந்த பெற்றியினை எல்லாம் சிறக்க உணர்த்தி நிற்கின்றன. 'ஆலினைக் காற்று மோதும், அசைவனோ எனச் சிரித்துக் கோலத்துக் கிளைகுலுங்க அடிமரக் குன்று நிற்கும்’ ஆகா! என்ன அழகான கற்பனை! என்ன அழகான வண்ணச் சித்திரம்! 'தாலாட்ட ஆளில்லாமல் தவித்திட்ட கிளைப்புள் எல்லாம் கால் வைத்த கிளைகளாடக் காற்றுக்கு நன்றி கூறும்’, என்ன காட்சி ஒவியம்! என்ன அரிய பண்பாடு பாவேந்தர் பாரதிதாசனார் ஒருவரே இவ்வாறு கவிதை புனைய இயலும்! அட்டியில்லை அதற்கு.

புறாக்களின் பன்னிறத்தைப் படம் பிடித்துக் காட்டும் கவிஞரின் கவிதையில் எத்தனை வண்ணங்கள்! அடடா!


“இருநிலா இணைந்து பாடி இரையுண்ணும்! செவ்வி தழ்கள்
விரியாத தாம ரைபோல் ஓர் இணை! மெல்லி யர்கள்
கருங்கொண்டை! கட்டி ஈயம் காயம்பூக் கொத்து! மேலும்
ஒருபக்கம் இருவா ழைப்பூ! உயிருள்ள அழகின் மேய்ச்சல்!”

—அழகின் சிரிப்பு: புறாக்கள்: 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/73&oldid=1461250" இலிருந்து மீள்விக்கப்பட்டது