பக்கம்:வாழையடி வாழை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனார் 81

'கூடத்தி லேமனப் பாடத்திலே —விழி
கூடிக் கிடந்திடும் ஆணழகை,
ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் —அவன்
உண்ணத் தலைப்படும் நேரத்திலே
பாடம் படித்து நிமிர்ந்தவிழி — தனிற்
பட்டுத் தெரித்தது மானின்விழி!
ஆடை திருத்திநின் றாள் அவள்தான் — இவன்
ஆயிரம் ஏடு திருப்புகின்றான்!”

இக்கவிதைக்கு விளக்கம் கூறல் தகாத செயலாம். மீட்டும் மீட்டும் பாட்டைப் படித்துச் சுவைத்துக் கவிஞரின் உளவியல் நுட்பமும், சொற்றிறனும் கண்டு கண்டு மகிழ்க.

தலைவனின் காதற்சேட்டையினை நினைந்து நினைந்து நெஞ்சம் உவக்கின்றாள் தலைவி. அவள், 'தலைவரின் செயலைத் தோழிக்குச் 'சொல்வதென்றால் வெட்கமடி தோழி’ என்று சொல்லிக் கூறத் தொடங்கு கின்றாள்:

'பின்னலைப்பின் னேகரும்பாம் பென்றான்— உடன்
பேதைதுடித் தேன் அணைத்து நின்றான்;
கன்னல்என் றான்கனி யிதழைக்
காதல் மருந்தென்று தின்றான். '

காதற்சுவை இப்பாடலில் கனிந்து நிறைந்துள்ளது.

காதல் வெறியிலே காதலியைப் புகழும் தலைவன் இரண்டே வரிகளில் அவளை அழகின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகின்றான்.

‘மின்னலிடை; கன்னல்மொழி,; இன்னும் சொன்னால்
விரியுலகில் ஒருத்தி நீ அழகின் உச்சி!’

—பாண்டியன் பரிசு 57; 5


இயற்கையோடு காதலியின் வாழ்வினையும் பின்னிப் பிணைந்து பாடும் கவிஞர் திறம் களியூட்டக் கூடியது.

வா.— 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/83&oldid=1461260" இலிருந்து மீள்விக்கப்பட்டது