பக்கம்:வாழையடி வாழை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனார் 87


புன்னை இலைபோல் புதையடிச் செருப்புகளைச் சின்னவர் காலிற் செருகி, சிறு குடை கையில் தந்து, கையொடு கூட்டி, தெருவரை தானும் நடந்து, பள்ளி நோக்கித் தள்ளாடி நடக்கும் பிள்ளைகள் பின்னழகு வெள்ளம் பருகி நிற்கின்றாள்.

இத்தகு மனைவி பொருளையும் பெரிதென்று எண்ணாமல், பூணையும் வேண்டாமல், தன்னை மணந்த கணவனது அருளையே உயிராக எண்ணும் அன்பு உடையவள். எனவே, தன் கணவன் மிக விரும்பிச் சுவைக்கும் உருளைக் கிழங்கு வருவலைச் சமைக்கும் போது: ‘உடையானுக்கிருக்கும் ஆசைத் திருவுளம் எண்ணி எண்ணிச் செவ்விள நகை செய்கின்றாள். 'விருப்பமாகக் கணவன் உண்டனன்; உண்ணக் கண்ட அவள், அவன் உவப்பை உண்டாள்.

'உண்டனன்; உண்ணக் கண்ட
நகை முத்தோ உவப்பை உண்டாள்.’

—குடும்ப விளக்கு : மூன்றாம் பகுதி:


இஃது என்ன இனிமையான குடும்பம்! நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் அன்றாே! இத்தகைய மாண்புமிக்க மனையாட்டியை மணத்தில் மணமாகப் பெற்றவன் கிடைப்பருஞ் செல்வம் பெற்றவன் அன்றாே?

“இளகிய பொன் உருக்கின்
சிற்றுடல் இருநீ லக்கண்
ஒளிவிடும் பவழச் செவ்வாய்
ஒருபிடிக் கரும்பின் கைகால்
அளிதமிழ் உயிர்பெற் றங்கே
அழகொடும் அசையும் பச்சைக்
கிளியினைக் காணப் பெற்றான்
கிடைப்பருஞ் செல்வம் பெற்றான்!’

—குடும்ப விளக்கு : நான்காம் பகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/89&oldid=1461265" இலிருந்து மீள்விக்கப்பட்டது