பக்கம்:வாழையடி வாழை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனார் 91


கின்றார்; பாண்டியன் பரிசு’க் காப்பியத் தலைவன் வேலன் கூற்றாகத் தமிழ்ப் பற்றினை வெளிப்படுத்தியுள்ளார்:

'எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனம்ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்
செத்தொழியும் நாள் எனக்குத் திருநா ளாகும்!'

—பாண்டியன் பரிசு:இயல்:55


இசைத்தமிழ்ப் பற்றும் குறைவற நிரம்பியவர் கவிஞர்; 'வெள்ளாடு வேங்கைப் புலியிடம் நெருங்குகையில் மகிழாது; மாறாகத் தன் உயிர், வேங்கைக்கு இரையாகி ஒழியுமே என்று வருந்தும். அது போன்றே தெலுங்கிற் பாடும் தமிழன் செய்கை தேனாகாது’ என்று இடித்துரைக்கின்றார்.

'துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா!’ என்ற இசைப்பாடலில், 'நல்லன் பில்லா நெஞ்சில் தமிழிற்பாடி நீ, அல்லல் நீக்க மாட்டாயா' என்று இசைத்தமிழ் வளர்க்கும் இனிய தொண்டினைப் புலப்படுத்துகின்றார். 'தமிழின் உயர்வே தமிழன் இயர்வு; தமிழன் உயர்வே தமிழின் உயர்வு என்பதனை,

'செந்தமி ழே! உயிரே! நறுந் தேனே!
செயலினை மூச்சினை உனக்களித் தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு!
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!'

—இசையமுது 1 : தமிழ்


என்னும் பாடலிற் புலப்படுத்தியுள்ளார்.

'நன்று தமிழ்வளர்க! —தமிழ்
நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக!
என்றும் தமிழ்வளர்க! —கலை
யாவும் தமிழ்மொழி யால்விளைந் தோங்குக!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/93&oldid=1461269" இலிருந்து மீள்விக்கப்பட்டது