பக்கம்:வாழையடி வாழை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனார் 93

'சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்!
தோளெங்கள் வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள்
ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்
கின்றதமிழ் எங்கள் மூச்சாம்!’

—பாரதிதாசன் கவிதைகள்: 'சங்க நாதம்'


"பாரதிதாசனார் தமிழ்ப் பற்றுக்கு எல்லையில்லை. அவருடைய பாடல்களைப் படிக்கும் அந்நியனும் தமிழனாகிவிடுவான்’ என்ற கூற்று மிகவும் உண்மை! தமிழ் வெறிநெறி கொள்ள இந்த ஒரு பாடலைப் படித்தாலே போதும்!

'இசையமுது' என்னும் நூலில் அமைந்துள்ள பாடல்கள் எல்லாம் தித்திக்கும் தேனாறுகள்; செந்தமிழ் இசை சேர்ந்த பூங்காக்கள்; பண் மிழற்றிடும் தும்பிகள். 'வண்டிக்காரன்', மாடு மேய்ப்பவன், 'ஆலைத்தொழிலாளி', 'தபாற்காரன்', 'சுண்ணாம்பிடிக்கும் பெண்கள்,’ 'இன்பம்' 'நிலா', 'பாண்டியன்மேற் காதல்', 'தமிழன்',’தமிழ்', 'தந்தை பெண்ணுக்கு' என்னும் பாடல்கள் இசை கூட்டும் உயிர்ப் பாட்டுகளாம்.

நிலாவைப் பற்றிக் கவிஞர் பாடியுள்ள பாட்டுக் கருத்தாழம் நிறைந்தது; எளிமை சான்றது; இனிமை மிகுந்தது.

'முழுமைநிலா! அழகுநிலா!
முளைத்தது விண்மேலே! —அது
பழமையிலே புதுநினைவு
பாய்ந்தெழுந்தாற் போலே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/95&oldid=1461270" இலிருந்து மீள்விக்கப்பட்டது