பக்கம்:வாழையடி வாழை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

‘வாழையடி வாழை’

..........................................................................

குருட்டு விழியும் திறந்ததுபோல்
இருட்டில் வான விளக்கு

—இசையமுது: நிலவு


இளைஞர்க்காகவும் இனிய பாடல்கள் பல புனைந்துள்ளார் பாவேந்தர் பாரதிதாசனார். 'இளைஞர் இலக்கியம்' என்னும் நூலில் இத்தகு பாடல்களைச் சிறக்கக் காணலாம்; இந்நூலில் 'நிலவு' என்னுந் தலைப்பில் காணும் பாடல்களுள் ஒன்று வருமாறு:

சொக்க வெள்ளித் தட்டு —மிகத்
தூய வெண்ணெய்ப் பிட்டு
தெற்கத்தியார் சுட்டு —நல்ல
தேங்காய்ப் பாலும் விட்டு
வைக்கச் சொன்ன தோசை —அது
வயிரவட்ட மேசை,
பக்கமீன்கள் பலவே —ஒரு
பட்டத் தரசு நிலவே.”

—இளைஞர் இலக்கியம்: நிலா


தொடக்க நாள் முதல் சாதி சமய பேதங்களை வெறுத்துச் சீர்திருத்த எண்ணமும் ஆவேசமும் கொண்டு தம் குன்றாத கொள்கைக்குப் போராடும் உயர் குணம் கொண்டவர் பாரதிதாசனார். புரட்சி உள்ளங் கொண்டு சமுதாயச் சீர்கேடுகளைச் சாடும் கவிஞர், 'காரிருளால் சூரியன் ஒளி மறைவதில்லை', என்றும், 'கறைச் சேற்றால் தாமரை மலரின் மணம் மட்டுப்படுவதில்லை', என்றும், 'பேரெதிர்ப்பால் உண்மை ஓடி ஒளி யாது, 'என்றும் கூறும் நெஞ்சுரம் மிக்கவர். அவர் வன்மை பெறக் கூறும் சில சீர்திருத்தக் கருத்துக்களைக் காண்போம்.

பெண் குழந்தைத் தாலாட்டில்:

'மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/96&oldid=1461271" இலிருந்து மீள்விக்கப்பட்டது