342 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் மாநாட்டிற்குத் தலைமை தாங்கித் தலைமையுரை ஆற்றிய அறிஞர் அண்ணாவின் பேச்சின் சுருக்கம் வருமாறு:- “இன்று காலை நடைபெற்ற ஊர்வலம் இந்த மாநாட்டிற்குப் பெருஞ்சிறப்பைக் கொடுத்திருக்கிறது. ஏறக்குறைய பத்து மைல் தொலைவு ஊர்வலம் வந்திருக்கிறது. ஊர்வலத்தைக் கண்ட நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இவ்வளவு படைபலம் நமக்குக் கிடைத்திருக்கிறதே என்ற எல்லை கடந்த உற்சாகம் எனக்கு ஏற்பட்டது. இது தேர்தல் வெற்றிக்கு ஒரு அறிகுறி என்றுதான் சொல்லவேண்டும். "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்ற பொன்மொழிதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. உங்களுடைய திறமையால், ஆற்றலால் எதையும் சாதிக்க முடியும் என்று நான் திடமுடன் நம்புகிறேன். அடுத்த பிப்ரவரித் திங்களில் நடைபெறப்போகும் தேர்தலில் நமக்கு நல்ல வெற்றிகிட்டும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. காங்கிரசின் ஆதிக்கத்தை ஒடுக்க, ஒழிக்க நாம் எல்லாக் கட்சிகளுடனும் பேச்சு நடத்துவோம். அப்படிப் பேசுவதன் மூலம் நாம் நமது இலட்சியத்தை மாற்றிக்கொள்ள மாட்டோம்; விட்டுக்கொடுக்கமாட்டோம். என் வீட்டில் ஒரு திருடன் திடீரென்று புகுந்துவிட்டால், அவனை அடித்துத் துரத்த எந்தத் தடி அகப்பட்டாலும், அதனை எடுத்து அடிப்பேன். அப்போது, அது சுதந்திரா தடியா? கம்யூனிசுட்டுத் தடியா? என்று பார்க்க மாட்டேன்; எந்தத் தடியானாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ள முயலுவேன். அது போன்ற நோக்கத்தில்தான் கழகம் தோழமைக் கட்சிகளோடு தேர்தல் கூட்டு வைத்துக் கொள்ளும்.
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/355
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
