பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் பிரிவினைத் தடைச்சட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்து, ஆங்கிலத்தில் அருமையான முறையில் கருத்துக்களை வெளியிட்டார். அறிஞர் அண்ணா அவர்கள் அப்போது வெளியிட்ட கருத்துக்களில் ஒருசில மட்டும் கீழே தரப்படுகின்றன. "அண்மையில் சீன ஆக்கிரமிப்பாளரோடு சமரசம் பேசி அமைதி - நட்புறவு உடன்பாடு காண இந்திய அரசினர், மேசையின்முன் உட்கார்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த முயற்சிக்கு நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பைத் தந்தோம். இன்று ஒரு குறிப்பிட்ட இலட்சியத்துக்காகப் பாடுபடுபவர் களை அழிப்பதற்கென்றே ஒரு புதிய தடைச் சட்டம், இந்த அவையின்முன் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்திற்குத் திருத்தம் கொண்டுவர, வேதனைதரக்கூடிய தடைச் சட்டம் ஒன்று இங்கு விவாதத்திற்குக் கொண்டுவரப் பட்டிருக்கிறது. இந்த மன்றத்தின் இரண்டு தரப்புக்களிலிருந்தும் கூறப்பட்ட பல கருத்துக்களையும் நான் மிகுந்த அக்கறையுடன் கேட்டுக்கொண்டிருந்தேன். சட்டத்தின் துணைகொண்டு தனிநாடு கேட்கும் முயற்சியை முறியடித்துவிட, இன்றைய ஆட்சியினர் முயலுகின்றனர். தனிநாடு என்னும் இலட்சியத்தைப் புகுத்தியவன் என்ற முறையில், என் நோக்கத்தை மீண்டும் விளக்கிட நான் முற்படவில்லை. எங்களுடைய கோரிக்கை குறித்துச் சிலரிடம் ஏற்பட்டுள்ள ஐயப்பாடுகள், தவறான எண்ணங்கள் ஆகியவற்றைக் களையவே நான் முற்படுகிறேன். எங்களுடைய இலட்சியம் பற்றிய விளக்கத்தையும், அதன் வரலாற்றையும் இந்த மன்றத்தில் உள்ளவர்கள் அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்வது நலம் பயக்கும் என்று கருதுகிறேன்.