பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.மு. கழகம் 401 காமன்வெல்த் நாடுகளிலிருந்து சுமார் 120க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் வந்து மாநாட்டில் கலந்துகொண்டார்கள். மாநாடு இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மாநாடு ஏழு நாட்கள், காலையிலும் மாலையிலும் நடைபெற்றது. காமன்வெல்த் நாடுகளிடையே நிலவ வேண்டிய நட்புறவு, நாடாளுமன்றங்களின் சனநாயக நடைமுறைகள், நாடாளுமன்றங்களின் உரிமைகள், நாடாளு மன்றம் நீதித்துறை நிருவாகத்துறை ஆகியவற்றி னிடையே இருக்கவேண்டிய உறவுமுறைகள், சனநாயகக் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் பேணிக் காக்க வேண்டிய இன்றியமையாமை, நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முறைகள் போன்ற பல்வேறு பொருள்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. - கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த கன்சர் வேடிவ் கட்சி, லேபர் கட்சி, லிபரல் கட்சி ஆகியவற்றின் முக்கியத் தலைவர்கள், அந்த அந்தக் கட்சிகளின் அமைப்புமுறை கொள்கை குறிக்கோள் - நடவடிக்கைகள் ஆகியவைபற்றி மாநாட்டில் விளக்கங்கள் தந்தனர். பிரிட்டிசு நாடாளுமன்ற நடவடிக்கைகளை, பார்வை யாளர் மாடத்திலிருந்து, நானும், மற்றப் பிரதிநிதிகளும் கூர்ந்து கவனித்தோம். நான் இலண்டனுக்குப் போயிருந்த அந்த நேரத்தில், பொதுத்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. முக்கிய அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், தேர்தல் பற்றிய விளம்பரமுறைகள், வேட்பாளர்கள் வாக்குகள் திரட்டும் பணி போன்றவற்றை நானும், ஏனையோரும் நேரில் சென்று பார்த்தோம்.