440 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் இந்திய அரசின் அனுமதிபெற்று 1967 சூலை 18ஆம் நாளன்று, 'மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரை, 'தமிழ்நாடு மாநிலம்' என்று பெயர் மாற்றம் செய்யும் சட்டமுன் முடிவு ஒன்றை, நான் தமிழகச் சட்ட மன்றத்தில் கொண்டுவந்தேன். சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரின் முழு ஆதரவோடும், கரவொலியோடும் அந்தத் தீர்மானம் ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டது. அப்பொழுது முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் எழுந்து, 'தமிழ்நாடு' என்று முன்மொழிய, எல்லா உறுப்பினர்களும் 'வாழ்க!' என்று வழிமொழிந்தனர். தமிழகச் சட்டமன்றத்தில், 'தமிழ்நாடு வாழ்க!" என்ற வாழ்த்தொலி முழக்கம் மூன்று முறை திரும்பத்திரும்ப எழுப்பப்பட்டு, சட்டமன்றமே பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்தது. 'தமிழ்நாடு' என்று பெயர்மாற்றம் செய்ததைத் தமிழக மக்கள் பெரும்பான்மையோரும் பேராவலோடு வரவேற்று, ஆங்காங்கு அது தொடர்பாக வெற்றி விழாக்களைக் கொண்டாடினர். அறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில், கல்லூரிகளில், பட்டப்படிப்புக்களைத் தமிழிலே கொண்டுவருவதற்கான முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டன. சட்டமன்றப் பேரவை மேலவை ஆகியவற்றின் நடவடிக்கைகள் பெரும்பகுதி தமிழிலேயே நடைபெற வழிவகை செய்யப்பட்டது. எல்லாத் துறைகளிலும் தமிழுக்கு நல்ல ஆக்கமும், ஊக்கமும் அளிக்கப்பட்டன. அறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில், இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு, சென்னையில் மிகச்சிறப்பாக நடத்தப் பெற்றது. தமிழை வளர்த்த பேரறிஞர் பெருமக்களின் சிலைகள் சென்னைக் கடற்கரைப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டன.
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/457
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
