பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

31


 எண்ணினாள். அதனல் அவரைப் பற்றி விசாரித்து அறிய அவள் ஆர்வம் கொள்ளவில்லை. மாளிகைக்கு வந்து போகும் அதிதிகளைப் பற்றி அவள் என்றுமே அக்கறை கொண்டதில்லை.

அன்று மாலையில் கிருஷ்ணா அதிதி அறையின் பக்கமாக நடந்த போது, யாரோ பாடிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். அவளுக்கு அது பேராச்சரியமாகவும் புதுமையாகவும் பட்டது. அந்த வீட்டில் யாரும் வாய் விட்டுப் பாடத் துணிந்தது கிடையாது. பாட்டின் ஒலி கேட்டாலே மோதிலாலுக்குக் கோபம் பொங்கிப் பாய்ந்து விடும். இந்திய சங்கீதம், மேல் நாட்டு சங்கீதம்-எந்தச் சங்கீதமும் அவருக்குப் பிடிக்காது.

கிருஷ்ணாவுக்குச் சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற துடிப்பு இருந்தது. இன்னிசைக் கருவி எதிலாவது நல்ல பயிற்சி பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனினும் உள்ளத் துடிப்பைச் செயல்படுத்தும் துணிவு அவளுக்கு இருந்ததில்லை, தந்தையிடம் அவள் கொண்டிருந்த அச்சம் தான் காரணம்.

ஆகவே, அந்த வீட்டில் தந்தைக்குக்கூட பயப்படாமல் யார் துணிகரமாகவும் அருமையாகவும் பாடுகிறார்களோ என்ற எண்ணம் அவளை அசையாப் பதுமை போல் நிற்க வைத்தது. அறையினுள்ளிருந்து வந்த கானம் அவள் உள்ளத்தைத் தொட்டது. அந்த வழியாக வந்த வேலைக்காரன் ஒருவனிடம், பாடுவது யார் என்று விசாரித்தாள் கிருஷ்ணா. அன்று காலையில் வந்த விருந்தாளி தான் அற்புதமாகப் பாடுகிறார் என்பது அவளுக்குப் புரிந்து விட்டது.