பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

55



தலைவர்கள் பலரும் ஜெயிலினுள் அடைபட்டுக் கிடந்ததால், 'நாட்டில் என்ன நடக்கிறது; ஏன் இந்த இயக்கம்; அரசாங்கம் எதற்காக எல்லோரையும் சிறையில் தள்ளுகிறது; நமது லட்சியம் என்ன?' என்பன போன்ற பிரச்னைகளை நாட்டினருக்கு எடுத்துச் சொல்லி விளக்க வேண்டியது தன் கடமை எனக் கொண்டாள் விஜயலக்ஷ்மி. பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் கூட்டங்கள் என்று பலப்பல இடங்களில் பேசினாள். கூட்டத்துக்குத் தக்கபடி, சந்தர்ப்பத்துக்கு ஏற்ற முறையில், எல்லோருக்கும் விளங்கக் கூடிய வகையில் சொல் விருந்து அளித்து வந்தாள் அவள். இனிமையான குரல்; கவர்ச்சிகரமான உச்சரிப்பு, ஆழ்ந்த கருத்து, உணர்ச்சியும் வேகமும் கலந்த பேச்சு—எல்லாம் கூடி அவளுக்கு 'நல்ல பிரசங்கி திறமையான பேச்சாளி' என்ற சிறப்பை ஏற்றுத் தந்தன.

அத்தியாயம்-9.

பத்து வாரங்களுக்குப்பிறகு சிறையிலிருந்து மீண்ட மோதிலால் நேருவின் உடல் நிலை மிகுதியும் சீர்கேடு அடைந்து விட்டது. மிகவும் மெலிந்து காணப்பட்டார் அவர். அவரது தேகநலனை உத்தேசித்து நேரு குடும்பத்தினர் முசெளரி எனும் மலை வாசஸ்தலத்தில் முகாமிட்டனர். மலைக்காற்றும், அமைதியான சூழலும், ஒய்வும், மனைவிமக்களின் போஷிப்பும் அவரது உடலுக்குத் தெம்பு ஊட்டி வந்தன.

இடைக்காலத்தில் ஜவஹர்லால் நேருவும் விடுதலை அடைந்திருந்தார். அவர் அலகாபாத்தில் தங்கியிருந்தார்.