பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

61



பலரைக் கைது செய்தார்கள். பலத்த காயம் பெற்றவர்களின் தொகையும் பெரிது தான்.

தங்களுக்கு விதித்த உத்திரவை மீறிவிட்ட குற்றத்துக்காகத் தாங்களும் கைது செய்யப்படுவர் என்று விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் உற்சாகத்தோடு எதிர் நோக்கி நின்றார்கள். ஏமாற்றம் அடைந்தார்கள். வருதத்துடன் வீடு திரும்பினார்கள்.

ஆனால் அது தற்காலிகமான ஏமாற்றம்தான் என்பது மறுநாள் காலையில் விளங்கிவிட்டது. அன்று காலை 9-30 மணிக்கு அக்காளையும் தங்கையையும் அழைத்துப் போவதற்காக இன்ஸ்பெக்டர் சகிதம் போலீஸ் கார் வீடு தேடி வந்தது. விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் உவகையுடன் சிறை சேர்ந்தனர்.

இருவருக்கும் அப்பொழுதுதான் முதல் சிறை அனுபவம் கிட்டியது. இருவருக்கும் தங்களைப் பற்றிய கவலை ஏற்படவில்லை. அச் சந்தர்ப்பத்திலே, தங்கள் எதிர்காலம் எப்படி அமையுமோ என்ற அச்சம் பிறக்க வில்லை அவர்கள் உள்ளத்திலே. தங்கள் தாயாரைப் பற்றிய நினைப்பு தான் வேதனையுடன் தலை தூக்கி நின்றது அங்கு.

ஒரு காலத்தில் ஆனந்தமும் ஆரவாரமும் ஜனப் பெருக்கமும் நிறைந்து ராஜகளையுடன் விளங்கிய பவனம். பிறகு துயரமும் சோகமும் அமைதியுமே கவிந்து தொங்கிய பெரிய வீடு. அங்கே, வயது முதிர்ந்த அன்னையைத் தன்னந்தனியளாக விட்டுச் செல்கிறோமே என்ற வருத்தம் தான் மகளிர் இருவருக்கும் ஏற்பட்டிருந்தது.