பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

63


கிருணாஷ்வுக்கு ஒரு வருஷம் சிறை. அபராதம் கிடையாது. இப்படி ஒவ்வொருவருக்கும் கிடைத்தது. மற்றும் இரண்டே இரண்டு பெண்களுக்குத் தான் ஒரு வருஷ தண்டனை. இதரர்களுக்கு விதம்விதமாக தண்டனை விதிக்கப்பட்டது. மூன்று மாதங்களிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை தரவாரியாக சிறைவாசப்பரிசு வழங்கப்பட்டது!


விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் லக்ஷ்மணபுரி ஜெயிலுக்குக் கொண்டு போகப்பட்டனர்.இரவோடு இரவாக அழைத்துச் செல்லப்பட்டார்கள் அவர்கள்.


மிகுந்த பனியும் குளிரும் கவிந்திருந்த அதிகாலை நேரத்தில், அவர்கள் உரிய சிறைச்சாலையினுள் புகுந்தார்கள். ஓங்கி நின்ற பெருஞ் சுவர்கள் உற்சாகத்துக்கு சமாதி கட்டும் சூழ்நிலை போல் விளங்கின. வெளி உலகத் தொடர்புக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களைத் தனியான உலகுக்குள் தள்ளும் அந்த அமைப்பு அவர்கள் இதயத்தில் பாரம் எழுப்பத்தான் செய்தது. சிறை வாசம் என்றால் என்ன; அது எத்தகைய கொடுமையாக இருக்கும் என்பதை அவர்களால் அப்போதுதான் முதன்முதலாக உணரமுடிந்தது.


இருப்பினும், இச் சூழ்நிலையால் உள்ளத்து உறுதி தளர்ச்சி பெறக்கூடாது; அப்படிச் சோர்வுற விடோம் என்ற மனோதிடம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. சிறைவாசத்தின் போது எத்தனையோ புறக்கஷ்டங்களையும், அகத்துயரங்களையும் அவர்கள் அனுபவிக்க நேர்ந்தது. ஆயினும் விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் தைரி-