பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

71


அத்தியாயம்-11.

ஜவாஹர்லால் நேரு மீண்டும் சிறையில் அடைபட்டார். கமலா நேருவுக்கு நோய் அதிகமாயிற்று. சிகிச்சை நாடி அவளை ஸ்விட்ஸர்லாந்துக்கு அழைத்துச் சென்றார்கள். நிலைமை மோசமானதும், நேரு விடுதலை பெற்று அங்கு சென்றார், கமலா குணமடையவில்லை.அவளை மரணம் ஏற்றுக் கொண்டது.

கிருஷ்ணா இரண்டு ஆண் குழந்தைகளின் தாயாகி இருந்தாள்.

இவ்விதம், நேரு குடும்பத்தில் துன்பமும் இன்பமும் அவ்வப்போது தோன்றி உணர்ச்சி மாற்றங்களை ஏற்படுத்தி வந்தன.

நாட்டிலும் சுமுகமான ஒரு சூழ்நிலை பிறந்திருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியருக்கு 'மாகாண சுயாட்சி' வழங்க முன் வந்தது. அத்திட்டத்தை ஏற்று, சட்டசபையில் அங்கம் வகிக்க காங்கிரஸ் தீர்மானித்தது. அதற்காகத் தேர்தலில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்றன.

1936-ல் தான் போராட்டம். காங்கிரஸ் கட்சியினர் ஒர் புறம் சர்க்காரின் தத்துபுத்திரர்கள், 'ஜரிகைத் தலைப்பா' ஜமீன்தார்களும், பதவிப் பித்தர்களும்       மற்றொரு பக்கம். பலத்த போட்டிதான். நாடெங்கும் தேர்தல் பிரசாரம் சூறாவளி வேகத்தில் பரவியது,

விஜயலக்ஷ்மி பண்டிட் ஐக்கிய மாகாணத்தில், லஷ்மணபுரி கிராமத் தொகுதியில் தேர்தலுக்கு நின்றாள்.