பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

விஜயலக்ஷ்மி பண்டிட்


பொங்கி எழுந்தது. உலகில் பல நாடுகளிலும் பெண்களின் உரிமை குரல் ஒலிக்கத் தொடங்கியது. பெண்களின் முன்னேற்றம் பற்றிப் பேசப்பட்டது. எல்லாம் வெறும் பேச்சு அளவில் நின்றுவிடாமல் செயல்களாகவும் வளர்ச்சி உற்றன.

படித்துப் பட்டங்கள் பெற்றார்கள் பெண்கள். சட்டங்கள் செய்யவும், நீதி வழங்கவும் முன்வந்தார்கள். அன்பு பணிபுரியவும், அசகாய சாதனைகள் செய்யவும் களத்திலே புகுந்தார்கள். விமானம் ஓட்டத் துணிந்தார்கள். படைகளிலே இடம் பெற்றார்கள். அறிவுத் துறையிலும் ஆராய்ச்சி அறைகளிலும் தலைநிமிர்ந்து நின்று, அரிய பெரிய செயல்களின் மூலம் தம் திறமையை உலகுக்கு உணர்த்தினார்கள். உணர்த்தி வருகிறார்கள்.

இந்தியாவிலும் இந்த விழிப்பு பரவாமல் இல்லை. சற்றுத் தாமதமாக ஏற்பட்டது இந்த உணர்வு. ஆனாலும் வெகு வேகமாக வளர்ந்து விட்டது.

இந்தியா என்றுமே பெண்களுக்கு உணர்வு உயர்வு அளித்து போற்றி வந்த நாடுதான். வேதங்கள், இதிகாசங்கள், சரித்திரம், இலக்கியம் எல்லாம் பாரத பண்பாடு பற்றி, பெண்கள் பெற்றிருந்த உயர்ந்த நிலைமை பற்றி எவ்வளவோ பேசுகின்றன. எனினும், இடைக்காலத்திலே பெண்கள் அடிமை நிலை எய்த நேர்ந்ததை அவை தடுத்துவிடவில்லை.உலகெங்கும் எழுந்த உத்வேகம் இந்தியப் பெண்களுக்கும் ஊக்கமும் உணர்வும் கொடுக்கத் தவறவில்லை.