பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

83

 வெளியே இருந்த தலைவர்கள் மக்கள் தாங்களாகவே மேற்கொண்டுவிட்ட போராட்டம் தகாத செயல் என்று எடுத்துச் சொல்லி, நாட்டில் அமைதியைப் பரப்ப அரும் பாடு பட்டார்கள். விஜயலக்ஷ்மி பண்டிட்டும் பல இடங்களுக்கு அலைந்து திரிந்து பிரசாரம் செய்தாள். அதிகார ஆணவத்தை எதிர்த்துப் பழி வாங்கும் நினைவில் எழுச்சியுற்ற மக்களிடையே, நாட்டு நலம் நாசமுறக் கூடாது என்று போதித்து வந்தாள் அவள்.

அவள் குரல் அப்போது மக்களிடையே எடுபடவுமில்லை அரசாங்கத்தினரால் போற்றப் படவுமில்லை. இரவு நேரத்தில் அவள் அயர்ந்து துங்கிக் கொண்டிருந்த வேளையில் போலீஸார் வீடு தேடிச் சென்று அவளைக் கைது செய்தனர்.

அது நிகழ்ந்தது 1942 ஆகஸ்டு மாதம் 12-ம் தேதி, சிறை செல்வது அவளுக்குப் புதிய விஷயம் அல்ல. தனியளான தன்னைப் பிடித்துச் செல்ல மாஜிஸ்ட்ரேட்டும், போலீஸ் அதிகாரியும், பலப்பல போலிஸ் வீரர்களும் வந்து சேர்ந்ததைக் கண்டு அதிசயித்தாள் அவள்.

மூன்று புதல்வியரில் கடைசிப் பெண் வயதில் சிறியவளாக இருந்தாள். இனி அவளை யார் கவனிப்பது என்ற கவலை தான் தாய் உள்ளத்தில் எழுந்தது. அன்னயின் மனக்குழப்பத்தை உணர்ந்து விட்டவள் போல் ரீதா பேசினாள். இந் நாட்களில் வாழ்வதே அற்புதமாக இருக்கிறது. என்னை இவர்கள் ஜெயிலுக்கு அழைத்துப் போகமாட்டார்களா என்ற எண்ணம் எனக்கு உண்டாகிறது. என்றாள் அவள். மகளின் பேச்சு தாயின் மனக் கவலையைத் துரத்தி விட்டது.