பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

89

இவ்விதம் மனு ஒன்று தயாரித்து விஜயலக்ஷ்மி ஐக்கிய நாடுகளின் மகாநாட்டினருக்கு அனுப்பி வைத்தாள். அச்சபைக்கு வந்திருந்த பல தேசத்துப் பிரதிநிதிகளில் பெரும்பாலானவருக்கு பேட்டி அளித்து இந்தியாவின் பிரச்சினைகளை விளக்கிச் சொன்னாள். பத்திரிகை நிருபர்களைச் சந்தித்து இந்தியா பற்றிய உண்மைகளை உணர்த்தினாள். பிரிட்டிஷாரின் பொய்ப் பிரசாரத்தை எதிர்த்துப் பல வகைகளிலும் ஆதரவும், நன்மதிப்பும் தேடினாள்.

அவளது வசீகரத் தோற்றம், இனிய பேச்சு, மோகன முறுவல், சுறுசுறுப்பு, ஆர்வம், அழகான உடை முதலியவற்றைக் கண்டு வியந்த போற்றியது அமெரிக்கா. பல இடங்களிலும் வந்து பேச வேண்டும் என்று அழைப்புகள் குவிந்தன. அவள் பெயரும் புகழும் பரவாத இடம் இல்லை என்று ஆயிற்று.

கலிபோர்னியா, பால்டிமோர் ஆகிய மாகாணங்களின் சட்டசபைகள் விஜயலக்ஷ்மிக்கு வரவேற்பு அளித்து மரியாதை செய்தன. அவளது பிரசாரத்தின் வன்மையால், அமெரிக்காவும் இதர நாடுகளும் ’இந்தியாவை திருப்தி செய்தாக வேண்டும். உலக சமாதானத்துக்கு இந்தியா சுதந்திரம் பெற வேண்டியது அவசியமாம் என்று வற்புறுத்த முன் வந்தன.

அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு விஜயலக்ஷ்மி 1945 அக்டோபர் மாதம் லண்டன் நகரடைந்தாள். அங்கிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்தாள். அவளுடைய் கீர்த்தி மிகவும் ஓங்கியிருந்தது.