பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

மிஸ்டர் குணசேகர்! நீங்கள் நியாயத்தைப் பேசுகின்றீர்கள் விளையாட்டுத்துறை ஒரு பொது மேடையாகப் போய்விட்டது. வசதியுள்ளவர்கள், வாய்ப்புள்ளவர்கள். சிபாரிசு உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து தலைமை ஏற்கலாம். வழிகாட்டலாம் என்பதுதான் இன்றைய நிலை. உண்மையுங்கூட என்றாலும், இது ஒன்றும் தவறில்லை. நீங்கள் விருப்பப்பட்டால் நிச்சயமாக விளையாட்டுத்துறையில் ஈடுபடலாம். அதற்காகப் பின் வாங்கிப் போக வேண்டாம் என்றார் இன்பநாதன்.

விளையாட்டுக்களில் எனக்கும் விருப்பம் உண்டு. பள்ளிக் கூட நாட்களில் நிறைய விளையாடி இருக்கிறேன். அதை வைத்துக் கொண்டு, இந்த துறையில் எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக்கொள்ளவோ, ஏற்ற முறையில் பொறுப்பேற்று நடத்த முடியும் என்று முன் வரவோ, எனக்குத் தைரியமில்லை, அதனால்தான் யோசிக்கிறேன் என்றார் குணசேகர்.

உங்கள் பண்பட்ட மனம் அப்படி நினைக்கிறது. அதற்காக நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. பணமும், பலரை ஏவி வேலை வாங்க வேண்டுமென்ற மனமும், பதவியும் அதிகாரமும், வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள், இன்று பரவலாக இந்தத் துறையில் வந்து பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கின்றார்கள், அவர்களிலே ஒருவராக நீங்கள் இருக்கலாம். இதை நீங்கள் ஒரு மைனஸ் பாயிண்டாக நினைக்க வேண்டாம் என்றார் இன்பநாதன்.

விளையாட்டு என்பதும் ஒரு கலை தானே! கலையை முறையாகப் பயின்றவர்கள் தானே இதனை முழுமையாகக் கற்பிக்க முடியும். அதில் அதிகம் அனுபவப்பட்டவர்கள் தானே அறிவுடன் வழிநடத்திட முடியும். அப்படியிருக்க, விளையாட்டுக்கலை என்பது எல்றாராலும் எளிதாகக் கற்றுக் கொள்ளக்கூடிய கலையாகவா இருக்கிறது? என்பதுபற்றி எனக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா ?