பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 வெளிச்சத்தை நோக்கி...

சிவந்தது. நான்கு பேர் முன்னிலையில் எப்படிப் பேசி விட்டான்...! என் ரவியை எழுந்திருக்கச் செய்துட்டானே. அவள் திருப்பிக் கத்தினாள்.

"நீங்க உட்காருங்க ரவி... எதையோ பார்த்து எதுவோ குலைத்தால் குலைக்கட்டும்.... பைத்தியக்காரன் சொல்றதை பெரிசா எடுக்கப்படாது... ஒங்களத்தான்... உட்காருங்க..."

மெய்யப்பன், விக்கித்தான். 'நான் அப்டிச் சொல்லியிருக்கக் கூடாதுதான். அதுக்காக, அவள் இப்படியா பேசுறது.... நல்லவேளை... வாழ்க்கையில் முதல் தடவையா உண்மை பேசிட்டாள். நான் பைத்தியக்காரனேதான்...'அவன் விமலாவைப் பார்த்தான். அவள் தன் கழுத்தைக் கடித்து, ரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதுபோல் ஒரு பிரமை, குடலை உருவி, தன் தோளில் மாலையாகப் போட்டுக் கொண்டிருப்பது போன்ற அச்சம்.

மெய்யப்பன், நாற்காலியில் செத்தவன்போல் சாய்ந்தான். முனுசாமி அவனை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டான். விமலா விடவில்லை.

"மிஸ்டர் ரவி... ஏன் அப்டி நிக்கிறிங்க.? வந்து, 'பழைய படி உட்காருங்க... கிறுக்குப் பிடித்தவன் பேசினால் பேசட்டும்... இப்போ நீங்க உட்காரப் போறிங்களா.. இல்லையா... ஒங்க இஷ்டம்... அப்புறம்...நாம் ஒரேயடியாய் உட்கார முடியாமப் போயிடும்... சீ... இது ஆபீஸா? பைத்தியக்கார ஆஸ்பத்திரி... ஒரு பைத்தியத்தால... எல்லோருக்கும் கஷ்டம்... ரவி, உட்காரப் போறிங்களா.. இல்லையா..."

அலுவலக ஊழியர்கள் அனைவரும் பிரமிப்போடு பார்த்தார்கள். சந்தானமும், சற்குணமும் - முறையே கனகத்தையும், மீனாட்சியையும் பார்த்துக் கொண்டார்கள். பாஷ்யம், தலையை ஆட்டிக் கொண்டார். உச்சக் கட்டமாயிற்றே... செலவில்லாத சினிமாவாயிற்றே...