பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 101

ரவி, விமலாவுக்குக் கட்டுப்பட்டவனாய், அங்கேயும் இங்கேயுமாகப் பார்த்துக் கொண்டே, நாற்காலியில் உட்கார்ந்தான். மெய்யப்பன் சோர்வாக சாய்ந்திருக்கும் தைரியத்தில், அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். மெய்யப்பனை ஆதரவாகப் பிடித்துக் கொண்டிருந்த முனுசாமி, எதிர்பாராத விதமாய் அழுத்தமாகக் கேட்டான்.

"யோவ்... ரவி... மொதல்ல... இடத்தைக் காலி பண்ணு."

ரவி, மீண்டும் எழுந்து நின்றபோது, அலுவலக ஊழியர்கள் அனைவரும் அங்கே கூடிவிட்டார்கள். விமலாவும், கேட்டதை நம்ப முடியாதவள்போல், எழுந்தாள். மெய்யப்பன் மட்டுமே அப்படியே சாய்ந்து கிடந்தான். முனுசாமி மீண்டும் அதட்டினான். "யோவ்... ஒன்னத்தாய்யா... நீ போறியா... இல்ல ஒதைச்சு அனுப்பணுமா..."

விமலாவால், கண்ணுக்கும், கருத்துக்கும், எதிர்கால கம்பெனி வேலைக்கும் இனியவனை, முனுசாமி மிரட்டுவதை சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. ரவி ஒரு தடவை, அவளிடம், அடியாள் இருப்பதாகச் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு, முனுசாமியைப் பார்த்து மிரட்டும் வகையில் கத்தினாள். "சும்மா துள்ளாதீங்க, முனுசாமி. அப்புறம் நீங்கதான் வருத்தப்படுவீங்க.."

முனுசாமி, மெய்யப்பனிடமிருந்து, அவளை நோக்கி நடந்தான். பாதிதூர இடைவெளியில் நின்றுகொண்டு, நிதானமாக வலுவான குரலில் கேட்டான். வார்த்தைகள் ஒன்றுடன் ஒன்று உரசி, தீப்பிடிக்கக் கேட்டான். 'பேட்டை' வார்த்தைகள் தாமாக வந்தன.

"என்னாமே நெனச்சே...? மெய்யப்பன் ஸார் சொன்னதுல என்னா தப்பு...? பட்டப்பகலுல... இவன் வந்து, மேஜைக்குக் கீழே, ஒன் கையைப் பிடிக்கிறான். அதைப் பார்த்துக்கினு சொம்மா இருக்கணுமா என்ன...? வேணுமுன்னால், அந்தப் பெஞ்சை இழுத்துப் போடுறேன்... படுக்கிறீங்களா...?