பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 வெளிச்சத்தை நோக்கி...

இல்லன்னா... ஸ்டோர் ரூமை திறந்து தரட்டுமா..? ஒன் யோக்கியதை தெரியாமல், மெய்யப்பன் ஸாரை பைத்தியம் என்கிற? நீ யாரால உருவான பெண்ணுன்னு எல்லாருக்கும் தெரியும். சும்மா அலட்டிக்காதே... நம்ம பேட்டையிலதான் ஒன் ஹாஸ்டல் இருக்குது... மறந்துடாதே... யோவ் ரவி, நான் உதைச்சால்தான் நீ போகணுமா..?"

ரவி, தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நடந்தான். கதவைத் திறக்கும்போதுகூட, அவன் திரும்பிப் பார்க்க வில்லை. விமலா, 'ஓ'வென்று கத்தினாள். அவளுக்கும் கண்ணீர் வந்தது. "ஒரு பெண்ணை திட்டுறதுலயும்... ஒரு அளவு இல்லையா..?" என்று அழுகையில் வார்த்தைகளைத் தேய்த்துக் கொண்டே அழுதாள். ஊழியர்கள், அப்படியும் பேசாமல், இப்படியும் பேசாமல், வாய்களை மூடி, காதுகளை மட்டும் கூர்மையாக்கிக் கொண்டார்கள். சத்தங்கேட்டு, மானேஜரும், வாணியும் வெளியே வந்தார்கள். விமலாவால் கட்டுப்படுத்த முடியவில்லை. வாணியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு முன்னிலும் பலத்த குரலில் ஓலமிட்டாள்.

மானேஜர் அதட்டினார். "என்ன நடந்தது..? என்ன நடந்தது...? அட யாராவது சொல்லுங்க..?"

யாருமே சொல்லவில்லை. ஆகையால், விமலாவே சொன்னாள். முனுசாமியின் பேட்டையை நினைத்துக் கொண்டு, ஜாக்கிரதையாகப் பேசினாள்.

"இந்த ஆபீஸ் தாசி வீடாய் ஆயிட்டாம் ஸார்... மிஸ்டர் மெய்யப்பன் சொல்றார். இந்த அப்பாவி முனுசாமியையும் தூண்டிவிட்டு, என் ஃபேமலி ஃபிரண்ட் ரவியை அடிக்காத குறையாகத் துரத்த வச்சிட்டாரு... என்னால இனிமேல் வேலை பார்க்க முடியாது ஸார்... நான் 'ரிஸைன்' பண்ணிடுறேன். அய்யோ கடவுளே... ஆண்டவா... இந்த அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா.."