பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 103

மானேஜர், மெய்யப்பனைக் கோபத்தோடு பார்த்தார். அவனோ இன்னும் நாற்காலியில் சாய்ந்தபடியே கிடந்தான். கண்கள் மட்டும் திறந்து கிடந்தன. மானேஜர் ஊழியர்களைப் பார்த்துப் பேசினார். "மிஸ். விமலா சொன்னது உண்மைதானா? ஒங்களைத்தான்... சொல்லுங்க.."

எவரும் சொல்லவில்லை. அந்த மெளனத்தை விமலா சொன்னது உண்மை என்பதற்கு அத்தாட்சியாக வைத்துக் கொண்டு கத்தினார். "ஆல் ரைட். இதுக்கு மேல... இவன் பித்துக்குளித்தனத்தை பொறுக்க முடியாது.... இவனை இன்னும் வைத்திருந்தால், எல்லோருக்குமே பைத்தியம் பிடிச்சுடும்... மிஸ் விமலா, பிளிஸ்.... அழாதீங்க... வாணி... இப்பவே ஒரு நோட் டைப் அடி... விமலாவிடம் ஒரு ஸ்டேட்மென்ட் வாங்கிட்டு..... இவனை சஸ்பெண்ட் செய்யுறதுக்கு ஒரு நோட் 'புட்டப்' செய்... குயிக்..."

வாணியால் தாள முடியவில்லை. சிறிது நேரத்திற்கு முன்புவரை தன் கன்னத்தைத் தட்டிய மானேஜர், தான் சொல்வதைத் தட்டமாட்டார் என்ற நம்பிக்கையோடு பேசினாள்.

"மிஸ்டர் மெய்யப்பன் அப்படிச் சொல்லியிருந்தால், அதுக்கும் ஒரு பேக்ரவுண்ட் இருக்கலாம் இல்லியா... அதையும் விசாரிக்காமல். அவரையும் கேட்காமல்..."

விமலா, வாணியைக் காறி உமிழ்வதுபோல் பார்த்தாள். கட்டுப்படுத்த முடியாத கோபத்தோடு கத்தினாள். "என்ன மேடம். பெரிய பேக்ரவுண்டை கண்டுபிடிச்சிங்க...? மெய்யப்பன் ஆபிஸே தாசி வீடுன்னு சொல்றார். அப்படியும் உங்களுக்கு ரோஷம் வரலன்னா என்ன அர்த்தம்? ஆபீஸின்னா... இந்த 'போர்ஷன்' மட்டுமில்ல. மானேஜர் அறையும் அதுல சேர்த்தி... மெய்யப்பன் என்னை மட்டும் சொல்லல... நானாவது ரவியைக் கட்டிக்கப் போகிறவள்....