பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 வெளிச்சத்தை நோக்கி...


வாணி மானேஜர் அறையில் இருந்து வந்தாள். தன்னை எல்லாவகையிலும் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர், தானும் பாதிக்கப்படலாம் என்று தெரிந்ததும், மெய்யப்பனை வீட்டுக்கு அனுப்புவதில் குறியாக இருப்பதைப் புரிந்து கொண்டாள். இவ்வளவு நேரமும் அங்கே 'டிக்டேஷன்' நடக்கவில்லை. ஒருவொருக்கொருவர் 'டிக்டேட்' செய்தார்கள். இவள், இறுதியில் அவர் கையை உரிமையோடு பிடிக்கப் போனபோது, அவர்'நோ பிளீஸ்' என்று சொல்லி விட்டார்.

வாணிக்கும், வெறுமையாக இருந்தது. மெய்யப்பனைப் பார்த்தாள். அவன் மெய்மறந்து கிடந்தான். தனக்காக வாதாடியவன், வம்பில் மாட்டியவன், உடன்பிறவாச் சகோதரன், 'அக்கா' என்ற ஒவ்வொரு ஒலியிலும் ஆன்மாவைப் பாய்ச்சியவன் சோர்ந்து கிடப்பதைக் கண்டவளுக்கு, தான் பொடிப் பொடியாப் போனது போலிருந்தது. அவனருகே சென்று, 'தம்பீ' என்றாள். அதற்குமேல் பேச முடியவில்லை. அந்தச் சொல் அழுகையாகியது. விம்மலாகியது. கண்ணீராகியது.

மெய்யப்பன், கண்களைத் திறந்து பார்த்தான். கடகடவென்று சிரித்தான். தலையை முன்னும் பின்னுமாக ஆட்டிக்கொண்டு, அவளை நேராகப் பார்த்தான். சாய்வாகப் பார்த்தான். அண்ணாந்து பார்த்தான். பிறகு, எழுந்து அவளைத் தாழ்வாகப் பார்த்துக் கொண்டே வெறிபிடித்த சிரிப்பை விட்டுக்கொண்டே கேட்டான்.

"என்னக்கா... மன்னிக்கணும். என்ன மேடம்... இப்போ வேற எவனாவது ஒங்களை சினிமாவுக்குக் கூப்புடுறானா... அப்போதானே ஒங்களுக்கு நான் தம்பி... சொல்லுங்க... அவனை நொறுக்குறனோ இல்லையோ... என்னை இன்னும் நல்லா நொறுக்கிக்கறேன்... ஆஹா... ஹா...”

மெய்யப்பனின் வெறிச் சிரிப்பு அடங்கி, முகம் இறுகியது. பத்து நிமிடத்திற்கு முன்புவரை உருகிப்